சர்கார் விநியோகஸ்தர்களுக்கு செம அடி! ரூ.10 கோடி நஷ்டம்!

By sathish kFirst Published Nov 24, 2018, 11:36 AM IST
Highlights

தமிழகத்தில் சர்கார் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படம் அரசியல் சர்ச்சை, மிக்ஸ்ட் ரிவ்யூ என்பதை தாண்டி முதல் மூன்று நாட்கள் நன்றாக சென்றது. அதன் பிறகு வசூல் குறையத் தொடங்கியதாக தகவல் வெளியானது. இருப்பினும் கூட உலகம் முழுவதும் தற்போது வரை சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் சர்கார் திரைப்படம் ஒட்டு மொத்தமாக வசூலித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. என்ன தான் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு வசூல் ஆகியிருந்தாலும் தமிழகத்தில் சர்கார் எதிர்பார்த்த வசூல் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

முதல் இரண்டு நாட்கள் மட்டுமே சர்கார் கலெக்சன் இருந்ததாகவும் அதன் பிறகு படம் படுத்துவிட்டதாகவும் செங்கல்பட்டு ஜி.கே.சினிமாஸ் உரிமையாளர் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார். இதே போல் சர்கார் படம் பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை என்று சென்னை ஏரியா விநியோக உரிமையை பெற்ற அபிராமி ராமநாதன் கூறியுள்ளார். சர்கார் படத்தால் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது வரை சர்கார் படம் தமிழகத்தில் மட்டும் 13 நாட்களில் 117 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த 117 கோடி ரூபாயில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் பங்கு போக விநியோகஸ்தர்கள் பங்காக 68 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஒன்பது ஏரியாவையும் சேர்த்து விநியோகஸ்தர்கள் 78 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் விநியோகஸ்தர்களுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு தவிர மற்ற ஏரியா விநியோகஸ்தர்களுக்கு சர்கார் படத்தால் நஷ்டம் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர படத்தை மொத்தமாக வாங்கி விநியோகஸ்தர்களிடம் விற்பனை செய்த தேனான்டாள் பிலிம்சுக்கும் கூட சர்காரால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆக மொத்தம் சர்கார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பத்து கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் படத்தை வாங்கியவர்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டு இருக்கும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!