
பிரபல பாடகர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார். முன்னதாக வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய மூன்று படங்களும் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் தோன்றி இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சென்னை 600028 என்னும் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார்.இந்தப்படத்தில் புது முகங்களாக சிவா, ஜெய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, இனிகோ பிரபாகரன், கார்த்திக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதில் நடித்திருந்த சிவா, ஜெய் போன்றோர் முன்னணி நாயகர்களாக உயர்ந்து விட்டனர்.
இந்த படத்தை தொடர்ந்து அதே டீமை வைத்து சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கிய வெங்கட்பிரபு கடந்த 2011ஆம் ஆண்டு அஜித்தை வைத்து 'மங்காத்தா' என்னும் படத்தை இயக்கினார். வணிகரீதியில் வெற்றி பெற்ற இந்தப் படத்தில் அஜித் எதிர்மறை ரோலில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதில் திரிஷா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து 2013ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து பிரியாணி, பின்னர் சூர்யாவை வைத்து மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய படங்களை இயக்கியிருந்தார் வெங்கட்பிரபு. பின்னர் மீண்டும் சென்னை 600028 இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் இது முந்தைய வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து குட்டி கதை என்னும் அந்தாலஜி திரைப்படத்தின் ஒரு பகுதியை இயக்கியிருந்தார். பின்னர் நேரடி ஒளிபரப்பு எனும் வெப்சீரிஸ் இயக்கிய வெங்கட்பிரபு சிம்புவை வைத்து சமீபத்தில் இயக்கிய மாநாடு படம் மாபெரும் வெற்றி கண்டது. இந்த படம் சிம்புவிற்கு மட்டுமல்லாமல் வெங்கட்பிரபுவுக்கும் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
இதைத்தொடர்ந்து அடல்ட் லவ்வை மையமாகக்கொண்ட 'மன்மதலீலை' என்னும் படத்தை இயக்கிய வெங்கட்பிரபு பல விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வெற்றியை கண்டது. இவர் நடிகராக முதலில் ஏப்ரல் மாதத்தில் என்னும் படத்தில் தோன்றினார். இறுதியாக கசடதபற என்னும் படத்தில் இணை தயாரிப்பாளராக ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பின்னணிப் பாடகராக ஹிட் படமான அஞ்சலி படத்தில் 'சம்திங் சம்திங்'; 'இரவு நிலவு'; 'மொட்டைமாடி'; 'வானம் நமக்கு'; 'அஞ்சலி அஞ்சலி' உள்ளிட்ட பாடல்களை வெங்கட் பிரபுதான் பாடியிருந்தார். இறுதியாக இவர் சென்னை 600028 பாகம்-2 சொப்பன சுந்தரி என்ற பாடலை பாடினார். மேலும் தயாரிப்பாளராக கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான சென்னை 600028 பாகம் 2 மற்றும் ஆர்கேநகர், கசடதபற உள்ளிட்ட படங்களை இவர் தன் சொந்தத் தயாரிப்பில் தயாரித்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒருகை பார்த்த வெங்கட்பிரபு 'இதோ பூபாலம்'; 'குண்டக்க மண்டக்க'; 'தேடாதே தொலைந்து போவாய்'; 'ஹாலிவுட் கிங்ஸ்' போன்ற தொடர்களை இயக்கியுள்ளார்.
இந்நிலைகள் வெங்கட்பிரபுவின் ட்வீட் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சினிமா துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆவதை கொண்டாடி வரும் வெங்கட்பிரபு இதுகுறித்த நன்றி கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் 'நீங்கள் இயக்கியத்தில் மோசமான திரைப்படம் மாஸ் தான் சூர்யா ரசிகனான எனக்கே அது பிடிக்கல' என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள வெங்கட்பிரபு அடுத்த முறை சூரியா அண்ணாவின் படத்தை இயக்கினால் உங்கள் எதிர்பார்ப்பை மொத்தமாக பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் ஆனாலும் மாஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் என குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.