
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. இப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பாமக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் அந்த சர்ச்சைக்குரிய காட்சி மாற்றப்பட்ட நிலையிலும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.
பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ஜெய் பீம் படக்குழு மீது கடும் அதிருப்தி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இதேபோல் வன்னியர் சங்கமும் ஜெய் பீம் படக்குழு ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என வலியுறுத்தி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியதோடு, 'ஜெய்பீம்' திரைப்படத்தை எந்த ஒரு மத்திய, மாநில அரசுகளின் விருதுகளுக்கும் பரிந்துரைக்க கூடாது என கூறி இருந்தது. இவ்வாறு இந்த விவகாரத்தை பாமக-வினர் தொடர்ந்து பூதாகரமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் 2டி நிறுவனம், இப்படத்தில் நாயகனாக நடித்த சூர்யா, இந்த படத்தை தயாரித்த ஜோதிகா, இப்படத்தை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட அமேசான் பிரைம் நிறுவனம் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டு நோட்டீசு அனுப்பிய வன்னியர் சங்கம் தற்போது சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடர்ந்து, அவர்களை விடாது கருப்பாக துரத்தி வருகிறது. இதன் காரணமாக நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் அடிக்கடி சிதம்பரத்துக்கு வந்து போக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
ஜெய் பீம் சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், நடிகர் சூர்யா அடுத்ததாக பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே பா.இரஞ்சித் படங்கள் என்றாலே சர்ச்சைகளுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது, தற்போது சூர்யாவும் அவருடன் இணைந்துள்ளதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.