அண்ணாத்த படத்தை வெளியிடும் உதயநிதியின் நிறுவனம்... இனி சர்ச்சைகளுக்குப் பஞ்சமிருக்காது...

By Ganesh RamachandranFirst Published Oct 28, 2021, 4:05 PM IST
Highlights

ஆண்ணாத்த படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம். பலமடங்கு அதிகரிக்கப்போகும் டிக்கெட் கட்டணம் முதல், தியேட்டர் கிடைக்கவில்லை என்ற சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு வரை பல சர்ச்சைகளை இது பெரிதுபடுத்தும் என்று பேசப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‛அண்ணாத்த’. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் நடந்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிள் பாடல் முதல் டீசர் டிரெய்லர் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. அதிலும் நேற்று ரிலீஸான டிரெய்லர், இப்போதே ரஜினி ரசிகர்களூக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை தந்திருப்பதால், தீபாவளிக்கு தியேட்டர்களுக்குப் படையெடுக்க ரெடியாகிவிட்டனர் ரசிகர்கள்.

பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ரஜினியின் தீபாவளி ரிலீஸ் போன்ற பல காரணங்களால், அண்ணாத்த படத்துடன் மோத விரும்பாமல் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட பல படங்கள் தீபாவளி ரேசில் இருந்து விலகிவிட்டன. அதிலும் அண்ணாத்த படத்துக்கு முன்பாகவே தீபாவளி ரிலீஸை அறிவித்த மாநாடு பின்வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அனைத்து தியேட்டர்களிலும் அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்யும் விதத்தில் வேலைகள் நடப்பதாகக் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விஷாலின் எனிமி திரைப்படத் தயாரிப்பாளார் தங்கள் படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்குமா என்று தெரியவில்லை என்றார். தீபாவளிக்கு ரிலீஸாகும் தங்கள் படத்துக்கு 200 தியேட்டர்களாவது கிடைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவேன் என்றும் பேட்டி கொடுத்தார்.

நேற்று அண்ணாத்த படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி, யூடியூபில் டிரெண்டாகி வந்த நிலையில், டிவிட்டரில் ஓரு முக்கியமான அறிவிப்பு வந்தது. முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தை நாங்கள் தான் வெளியிடப்போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் மூலம் அறிவித்தது. ”சர்ப்ரைஸ்... சர்ப்ரைஸ்” என்ற தலைப்பில் அந்த அறிவிப்பு, ரெட் ஜெயண்ட்ஸ் பெயர் சேர்க்கப்பட்ட அண்ணாத்த போஸ்டருடன் வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடும் இந்த அறிவிப்பு பலருக்கும் உண்மையில் சர்ப்ரைஸாகவே இருந்தது. உதயநிதியும் இந்த அறிவிப்பை ரீ-ட்வீட் செய்திருந்தார்.

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து, பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் போது, மிக அதிக திரையரங்கங்களில் ரிலீஸ் செய்து, காட்சிகளின் எண்ணிக்கையையும் டிக்கெட் விலையையும் உயர்த்தி, முதல் மூன்று நாட்களிலேயே படத்தின் லாபத்தை சம்பாதிப்பது பொதுவான சினிமா டெக்னிக். அந்த டெக்னிக்கை பல ஆண்டுகளுக்கு முன்பாக அனைவருக்கும் சொல்லிக்கொடுத்ததே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடும் போது, டிக்கெட் விலை சர்ச்சை, நள்ளிரவு-அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கான அரசு மற்றும் போலீஸ் அனுமதி போன்ற எதிலும் பிரச்சனை இருக்காது என்று சன் பிக்சர்ஸ் கணக்கு போட்டிருக்கலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். லாபத்தை உறுதிப்படுத்தவே ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் சன் பிக்சர்ஸ் இணைந்துள்ளதாகவும் பேசப்படுகிறது. குறிப்பாக, கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட்ஸ் தயாரிப்புகள் வெளியாகும் போது, தங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று சிறிய தயாரிப்பாளர்கள் அதிகம் குற்றம்சாட்டி வந்தனர். அந்த பிரச்சனை இந்த முறையும் நீடிக்குமா? அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையில் மட்டுமே விற்பனை நடப்பதை காவல்துறை உறுதிப்படுத்துமா? இப்படி நிறைய கேள்விகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் அண்ணாத்த அப்டேட்.

click me!