4 முன்னணி ஹீரோக்கள் நடிப்பில், கேரள வெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட '2018' படம் மலையாள திரையுலகையே வசூலில் மிரட்டி வருகிறது.
கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ரியல் கேரளா ஸ்டோரியாக வெளியான திரைப்படம் '2018'. இப்படம் தற்செயலாக சர்ச்சைக்குரிய படமாக பார்க்கப்பட்ட 'தி கேரளா ஸ்டோரி' படத்துடன் வெளியானது. சுதிப்தோ சென் இயக்கிய 'தி கேரளா ஸ்டோரி' படம் நாளுக்கு நாள் பல பிரச்சனைகளுக்கும், விவாதங்களுக்கும் வழிவகுத்த நிலையில்... அனைவரது கவனமும் அந்த படத்தின் மீது தான் இருந்தது.
ஆனால் ரியல் கேரளா ஸ்டோரியான '2018' திரைப்படம் சைலண்டாக ஓடி நாளுக்கு நாள், வசூலில் வாரி குவித்து வருகிறது. இப்படம், கடந்த 2018-ம் ஆண்டு, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த படத்தை ஜூட் அந்தனி ஜோசப், என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில், குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், ஆகிய நான்கு ஹீரோக்கள் நடித்துள்ளனர். மேலும் அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், தன்வி ராம், ஷிவதா மற்றும் கௌதமி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேரளா வெள்ளத்தில் மூழ்கிய போது , பொதுமக்கள் எப்படிப்பட்ட துயரங்களுக்கு ஆளானார்கள் என்பதை, நடிகர்கள் தரூபமாக நடித்து, பார்க்கும் ரசிகர்கள் மனதையே கலங்க வைத்துளள்னர்.
இப்படம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக... பல்வேறு இடர்பாடுகளுக்கும், சவால்களுக்கும் நடுவே தான் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர்கள் லால், ஆசிப் அலி மற்றும் நரேன் ஆகியோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தண்ணீரில் படுகுகளில், சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்றும் மீனவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதே போல் இதில் நடித்த நடிகர்களையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
மேலும் இப்படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் நாள் இப்படம், ரூ 1.85 கோடி வசூல் மட்டுமே செய்த நிலையில், இப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால்... வசூலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நான்கு நாட்களில் கேரளாவில் மட்டுமே இப்படம் 13 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.