படத்தின் பப்ளிசிட்டிக்காக கதாநாயகியை ‘காணாமல்’அடித்த தயாரிப்பாளர்...

By Muthurama LingamFirst Published Jul 31, 2019, 3:43 PM IST
Highlights

’என் படத்தின் கதாநாயகியைக் காணவில்லை’என்று ‘தொரட்டி’படத்தயாரிப்பாளரும் ஹீரோவுமான மித்ரு புகார் கொடுத்திருந்தது படத்தின் பப்ளிசிட்டிக்கான ஸ்டண்டா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காணவில்லை என்று சொல்லப்பட்ட கதாநாயகி தந்து பெற்றோருடன் பத்திரமாக உள்ளார்.
 

’என் படத்தின் கதாநாயகியைக் காணவில்லை’என்று ‘தொரட்டி’படத்தயாரிப்பாளரும் ஹீரோவுமான மித்ரு புகார் கொடுத்திருந்தது படத்தின் பப்ளிசிட்டிக்கான ஸ்டண்டா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காணவில்லை என்று சொல்லப்பட்ட கதாநாயகி தந்து பெற்றோருடன் பத்திரமாக உள்ளார்.

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் ‌ஷமன் மித்ரு. இவர் ’தொரட்டி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். அப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். இந்த படத்தில் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த சத்திய கலா (26) என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 2-ந் தேதி வெளியாக உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் பட தயாரிப்பாளர் ‌ஷமன் மித்ரு பட ரிலீஸ் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். 

அதில் நடிகை சத்தியகலா கலந்து கொள்ளவில்லை. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி போலீசாருக்கு கடந்த 25-ந் தேதி ‌ஷமன் மித்ரு தபால் மூலம் புகார் அனுப்பினார். இதனை தொடர்ந்து கடந்த 29-ந் தேதி பொள்ளாச்சி போலீசார் புகார் மனு சி.எஸ்.ஆர். வழங்கி சத்திய கலா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.அப்போது சத்திய கலாவின் பெற்றோர் எங்கள் மகள் இங்கு தான் உள்ளார். அவர் எங்கும் மாயமாகவில்லை என தெரிவித்தனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ‌ஷமன் மித்ரு சென்னை ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்டு உள்ள சத்திய கலாவை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தந்தையின் கட்டுப்பாட்டில் தானே நடிகை உள்ளார். அவரை மீட்க கோரி மனுதாரர் எப்படி வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பினர். பின்னர் சத்திய கலா தற்போது எங்கே உள்ளார்? என்று போலீஸ் தரப்பில் வருகிற 5-ந் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து பொள்ளாச்சி போலீசார் நடிகை வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகை சத்திய கலா வீட்டில் தான் இருந்தார். அவர் போலீசாரிடம், ”நான் மாயமாகவில்லை. எனது வீட்டில் தான் உள்ளேன். கருத்து வேறுபாடு காரணமாக தான் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு செல்லவில்லை” என பதில் அளித்தார்.நடிகையின் விளக்கத்தை பொள்ளாச்சி போலீசார் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். சம்பளம் தொடர்பாக நடிகைக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை இருந்து வருவதாகவும், அதனால் தான் நடிகை சத்திய கலா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் இரு நாளில் படம் வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு நல்ல விளம்பரமாக இருக்குமே என்ற உத்தியில் தயாரிப்பாளர் காணவில்லை நாடகத்தை ஆடியிருப்பதாகத் தெரிகிறது.

click me!