தீரனுக்கு நச்சுன்னு அடிக்கலாம் ஒரு போலீஸ் சல்யூட்... காக்கி கார்த்தியின் செம கிரைம் த்ரில்லர்... தீரன் அதிகாரம் ஒன்று - ரிவீயூ!

First Published Nov 17, 2017, 8:06 PM IST
Highlights
Theeran Adhigaram Ondru aka Dheeran Adhigaram Ondru movie review


கட்டாய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கார்த்தி. தோழா நல்ல கதை ஆனால் அது கமர்ஷியலாகவோ, தனி ஹீரோவாகவோ கார்த்திக்கு கைகொடுக்கவில்லை. காற்றுவெளியிடை எந்த விதத்திலும் கார்த்தியை உயர்த்திவிடவில்லை. உதவி இயக்குநராக தான் பணியாற்றிய மணிரத்தினத்திடம் ஹீரோவாக கெத்து காட்டி பெருமை மட்டுமே கிடைத்தது. 

இதற்கடுத்து பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷாலுடன் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ ஆரம்பிப்பட்டு பின் டிராப் ஆனது. இந்த நேரத்தில்தான் சதுரங்கவேட்டை இயக்குநர் வினோத் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ கதையுடன் கார்த்தியை சந்தித்தார். பக்கா போலீஸ் ஸ்டோரி. ஏற்கனவே ‘சிறுத்தை’ போலீஸ் ஸ்டோரி கார்த்திக்கு பக்காவாக கைகொடுத்திருந்ததால் இந்த காக்கி யூனிஃபார்மில் நச்சென ஃபிட் ஆனார் கார்த்தி. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என ரிலீஸுக்கு முன் கார்த்தி நிறைய பேசினார். ‘ஜஸ்ட் விளம்பரம்’ என்று நினைத்தவர்கள் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ சொன்ன ரிவியூவை கேட்டு தங்கள் எண்ணத்தை மாற்றியிருக்கிறார்கள். ஆம்! படம் நல்ல ரிவியூவை தந்திருக்கிறது. 

இதுதான் தீரன் அதிகாரம் ஒன்று சொல்லும் கதை...

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொலை, கொள்ளைகளில் ஈடுபடும் கேங்கை பிடிக்க பயணிக்கும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை என்னவாகிறது, எப்படி மாறுகிறது என்பதே ‘தீ.அ.ஒ’.

தீரன் திருமாறன் எனும் கேரக்டரில் கார்த்தி செம மாஸ். டூட்டியை நேர்மையாக செய்வதால் அடிக்கடி பணியிட மாறுதலுக்கு ஆளாகிறார். ஆனால் எங்கே சென்றாலும் வேட்டையாடி விளையாடுகிறார். இந்த நிலையில் அவரிடம் விநோத வழக்கு ஒன்று சிக்குகிறது. அதாவது தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து, அதில்  வாழும் மனிதர்களை குரூரமாக கொலை செய்து தப்பிக்கிறது ஒரு கும்பல். தேசம் முழுவதும் கைவரிசையை காட்டும் அந்த கும்பலின் கைரேகையை தவிர போலீஸுக்கு வேறெந்த தடயமும் சிக்குவதில்லை. 18 பேர் கொல்லப்பட, 60க்கும் மேற்பட்டோர் காயம்பட இந்த கேங்கை பிடிக்க முடியாமல் திணறுகிறது போலீஸ். இந்த அஸைன்மெண்ட் தீரனின் கைகளுக்கு வர, படம் தினவெடுத்து நகர்கிறது. 

தமிழ் சினிமாவில் இதுவரையில் எத்தனையோ போலீஸ் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். என்னதான் ஃபிட் ஸ்டோரியாக இருந்தாலும் சினிமாவுக்கான மிகைப்படுத்தல் அதில் இருக்கும். ஆனால் இது நிஜமான போலீஸ் அதிகாரியின் கதையை கச்சிதமாய் சொல்கிறது. கார்த்தியின் பங்களிப்பு அபாரம். வீண் சப்தங்கள், சபதங்கள், பில்ட் அப்கள் இல்லாமல் இயல்பாய் தன் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார். தனக்கு மட்டுமல்ல தன்னுடன் பயணிக்கும் குழுவுக்கும் எந்த துன்பமும் நேர்ந்துவிட கூடாது எனும் எண்ணத்துடன் பொறுப்பாக செயல்படும் போலீஸ் குணம் ஆச்சரியப்படுத்துகிறது. 

ரகுல் ப்ரீத் சிங், செம கிளாமர் ரசகுல்லா. டிரான்ஸ்பர் ஆகும்போதெல்லாம் ‘ஏன் இப்டி. ஒழுங்கா லஞ்சம் வாங்கிட்டு வேலை பார்க்கமாட்டியா?’ என்று கொஞ்சும் போது நேர்மையான போலீஸ் அதிகாரியின் யதார்த்த வாழ்க்கை ஊசியாய் குத்துகிறது. 
ரோஹித் பத்தாக், அபிமன்யு சிங் இருவரும் மிரட்டுகிறார்கள்.

ஒரு வருடத்தின் அத்தனை சீசனையும் வெளிப்படுத்தும் கால நிலைகளில் பயணிக்கும் கேமெரா இயக்குநர் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. ஜிப்ரானின் இசை கூல். இம்புட்டு கம்பீரமான கதையில் ஓவர் காதல் காட்சிகள்தான் இழுக்க்க்க வைக்கிறது. திலீப் சுப்ராயனின் ஆக்‌ஷனில் நமக்கே உடம்பு வலிக்கிறது. அம்மாடியோவ் ஆக்‌ஷன் பிளாக்ஸ். 


ஒரு உண்மையான க்ரைம் வரலாற்றை மிக லாவகமாக திரைக்கதையமைத்து, அதனுள் நுட்பமான கிரிமினல் விஷயங்களையும், அதை ஒரு போலீஸ் அதிகாரியின் மூளை எப்படி தேடிப்பிடித்து வேட்டையாடும் என்பதையும் மிக அழகாய் கோர்த்திருக்கிறார் விநோத். பிடிங்க பாஸ் ஒரு பொக்கேவை! மனுஷன் இந்த படத்துக்காக ரொம்பவே மெனெக்கெட்டு கிரிமினலாய்வு செய்திருக்கிறார். 

திரைக்கதையைப் பொறுத்தவரையில், 90, 91,95, 2000, 2005 என காலக்கட்டத்திற்கு ஏற்பட, அதனுடைய தொடர்புடைய நிகழ்வுகளையும், குறிப்புகளையும் இணைத்திருப்பது மிகவும் ரசிக்க வைத்ததோடு, படம் பார்க்கும் ரசிகர்களையும் அதனுடன் பின்னோக்கிப் பயணிக்க வைத்திருக்கிறது. உதாரணமாக, மங்கை சீரியல் ஒளிபரப்பான காலக்கட்டம், நோக்கியா செல்போன்கள் அறிமுகமான காலக்கட்டம் போன்ற குறிப்புகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

படத்தில் வசனங்களாலும் பல இடங்களில் ஈர்க்கிறார் டைரக்டர் வினோத்...

“சார்.. அதிகாரத்துல இருக்குற ஒரு எம்எல்ஏவுக்கு நடந்த ஒடனே தான் அரசாங்கமே முழிக்குது”... இதே நடவடிக்கைய ஒரு சாதாரண குடும்பத்துக்கு நடந்த போதே எடுத்திருந்திருந்தா இவ்வளவு அப்பாவிக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்குமா!?  “நாங்க மதராஸ் பக்கம் கொள்ளையடிக்க வந்த காரணம் அங்க பொண்ணுங்க நெறையா நகை போட்டிருந்தாங்க.. "தப்பிச்சுப் போகும் போது மதராசி போலீசுக்கு 20 ரூபாய் கொடுத்தா போதும் விட்டிருவாங்க", "எங்க ராஜஸ்தான் போலீஸ்னா கையில துப்பாக்கி வச்சிருப்பாங்க சுட்டுருவாங்க" இப்படிப்பட்ட வசனங்கள் நெற்றிப் பொட்டில் அறைந்தார் போல உண்மைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.

போலீஸ்காரர்களின் நுட்பமான தந்திரங்களையும், பொறுப்பையும், பொதுமக்களை காப்பாற்ற எப்படி சாமர்த்தியமாய் செயல்பட வேண்டும் என்பதையும் அழகாய் விளக்கி நகர்கிறது படம். ‘நல்லவங்கட்ட இருந்து கெட்டவங்களை காப்பாத்துற அடியாள் வேலையை தானே பார்த்துட்டிருக்கிறோம்.’ என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசுவது சுரீர் யதார்த்தம். 

ஆக மொத்தத்தில் தீரனுக்கு நச்சுன்னு அடிக்கலாம் ஒரு போலீஸ் சல்யூட்.
 

click me!