'லியோ' படத்தின் வெற்றி விழாவிற்காக பாதுகாப்பு கோரி, காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. சுமார் 300 கோடி பட்ஜட்டில் உருவான இந்த படம், ஒரே வாரத்தில் 461 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.
கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் மாஸ் காட்டியது 'லியோ'. முதல் வாரத்தில் 'லியோ' திரையிடப்பட்ட திரையரங்குகள் ஹவுஸ் புல்லாக காணப்பட்ட நிலையில், இரண்டாவது வாரத்திலேயே கூட்டம் குறைந்து, வசூலும் டல் அடித்துள்ளது. இந்நிலையில் 'லியோ' படத்தின் வெற்றியை கொண்டாட படக்குழு தற்போது ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி, 'லியோ' படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவ. 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் தளபதி விஜய் உட்பட, இப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர். ரசிகர்கள் வருகையும் அதிகமாக இருக்கும் என்பதால், பாதுகாப்பு கோரி தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
லியோ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பின் நடித்துள்ளார். மேலும் ஜனனி, மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யாப், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D