தளபதி விஜய்யின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியது. ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் சம்பந்தமாக இறுதிவரையிலும் நெருக்கடி இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியது.
பெண்கள் கால்பந்து விளையாட்டு அணியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராயப்பன், மைக்கெல் மற்றும் பிகில் என மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கிறார். கில்லியில் கபடியை முன்னிலை படுத்தியது போன்று பிகிலில் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தளபதி விஜய் நடித்திருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிறந்த பொழுதுபோக்கு படமான பிகில் தங்களுக்கு வேற லெவல் தீபாவளியை பரிசளித்திருப்பதாகவும் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அனல் தெறிக்க பதிவிட்டு வருகின்றனர். படம் வெளியாகுவதற்கு முன்பே 136.55 கோடி வசூல் செய்த நிலையில் சிறப்பு காட்சியோடு வெளியாகி இருப்பதால் வசூலில் மீண்டும் புதிய சாதனையை விஜய் திரைப்படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இது 'கைதி தீபாவளி' தான்..! வெறித்தனமா கொண்டாடும் கார்த்தி ரசிகர்கள்..!