சுஷாந்த் மரண வழக்கு: காதலி ரியா சக்ரபர்த்தியின் தம்பி, வீட்டு மேனேஜர் கைது... சிபிஐ அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 5, 2020, 9:13 PM IST
Highlights

இதையடுத்து சுஷாந்த் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட  ரியாவின் தம்பியான ஷோயிக் சக்கரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா இருவரும் இன்று மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீகார் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். 

இதனிடையே பீகார் போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து  விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று, வழக்கு விவரங்களை மும்பை போலீஸ், சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கை 11 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்போது ரியா சக்ரபர்த்திக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர் இருப்பதாக அவருடைய வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலம் தெரிய வந்தன. அதிலிருந்து எம்.டி.எம்.ஏ., மரிஜுவானா மற்றும் பிற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ரியா பயன்படுத்தியது தெளிவானது. இதையடுத்து ரியா மீது போதை பொருள் கட்டுப்பாட்டுத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் நேற்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதையடுத்து மேலாளர் சாமுவேலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்திற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து சுஷாந்த் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட  ரியாவின் தம்பியான ஷோயிக் சக்கரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா இருவரும் இன்று மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் மேலும் பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி என்சிபி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் 9ம் தேதி வரை என்சிபி காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

click me!