சொன்னதை செய்த இயக்குனர் சுசீந்திரன்... ரூ.5 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்..!

By manimegalai aFirst Published Jun 20, 2021, 4:55 PM IST
Highlights

சுசீந்திரன் சொன்னது போலவே, இந்த நடிப்பு பயிற்சி மூலம் கிடைத்த ரூ. 5  லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார். 

கொரோனா தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு புறம் கொரோனா தொற்று தலை தூக்கியதில் இருந்து பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, அன்றாட உணவிற்கு கூட கஷ்டப்படும் சூழல் உருவாகியது. தற்போது தமிழகத்தில் சுமார் 20 திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவர பட்டுவிட்டாலும்  முழுமையாக கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை.

கொரோனா தொற்றால்  மக்கள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளும், தடுப்பூசி பற்றாக்குறையை தீர்க்கவும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்க பட்டு வருகிறது. அரசின் இந்த உன்னதமான பணிகளுக்காக பல்வேறு பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் சுசீந்திரன், ஆன்லைன் நடிப்பு பயிற்சி நடத்த உள்ளதாகவும் இதில் கிடைக்கும் தொகையை கொரோனா நிவாரண பணிகளுக்கு தர உள்ளதாக அறிவித்தார்.

தற்போது, சுசீந்திரன் சொன்னது போலவே, இந்த நடிப்பு பயிற்சி மூலம் கிடைத்த ரூ. 5  லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார்.  இது குறித்து சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...  இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவும் எண்ணத்தில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி, அதில் கலந்துகொண்டோர் வழங்கிய கட்டண தொகை மொத்தமாக ரூபாய் 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்.

இந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி மற்றும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த மோத்தி, மக்கள் தொடர்பாளர் ரேகா அவர்களுக்கும், என் உதவியாளர் வினோத், வைசாலி, அவர்களுக்கும் மற்றும் எங்களோடு துணையாக நின்ற தொழில்நுட்ப கலைஞர்கள் சரத் நிவாஸ், சரவணன், சூரியா தேவன் அவர்களுக்கும் முக்கியமாக இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு சென்று அறியச் செய்த அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் ஊடகத்துறை மற்றும் சமூக வலைத்தளத்தினர்களுக்கும் ஆதரவு தந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று இயக்குனர் சுசிந்திரன் தெரிவித்துள்ளார்.

click me!