இருளர் மாணவர்களின் கல்விக்கு ரூ.1 கோடி… தொடரும் சூர்யாவின் கொடை உள்ளம்!!

By Narendran SFirst Published Nov 1, 2021, 4:20 PM IST
Highlights

இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். அதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஏழை மாணவர்களின் கல்விக்காக நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அகரம் அறக்கட்டளை மூலமாக படிக்க இயலாத பல மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா, இந்த திரைப்படத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மை கதையில் நடித்துள்ளார். சாதி வெறிக்கு எதிரான  அழுத்தமான வசனங்களுடன்  வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பேசும் கஷ்டத்தை வெறும் திரையோடு மட்டும் நின்றுவிடாமல் நிஜத்திலும் மாற்ற நினைத்த சூர்யா, இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஸ்டாலினை நேரில் சந்தித்த சூர்யாவும் - ஜோதிகாவும் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர். அவர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதியும் உடன் இருந்தார். அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இப்படத்தின் காட்சிகள் நேற்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அதுக்குறித்து தனது டிவிட்டரில் கருத்து பகிர்ந்திருந்தார். கூட்டத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் தான் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவின் பிறந்தநாளன்று இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது. சான் ரோல்டன் படத்திற்கு இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில்,  பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடக்கூடிய வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளதாகவும், நீதியரசர் சந்துரு என்ற வழக்கறிஞர் தான் பணியாற்றியபோது, வாதாடப்பட்ட முக்கிய வழக்கை மையமாக வைத்து ஜெய்பீம் படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து நடிகர் சூர்யா பேசுகையில், ஜெய் பீம் படம் தான் நடித்த மற்ற படங்களில் இருந்து வித்தியாசமானது. இந்த படம் நான் இதற்கு முன் நடித்து உள்ள எந்த படத்தின் சாயலிலும் இருக்காது என கூறியுள்ளார். ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்டு உள்ள கதை, நடித்துள்ள நடிகர்கள், அதில் காட்டப்பட்டு இருக்கும் உணர்வுகள், என ஒட்டுமொத்த படமும் அழுத்தமானதாக இருக்கும். இது வெறும் சாதாரணமான பொழுதுபோக்கு படம் இல்லை. ஆனால், இப்படம் உங்கள் மனதில் நிச்சயம் தாக்கத்தை உண்டாக்கும். பார்வையாளர்களுக்கு என்றும் நினைவில் இருக்கும் ஒன்றாக ஜெய் பீம் இருக்கும் என சூர்யா கூறியுள்ளார். 

click me!