சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 42 படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் ஒரே நாளில் 2.5 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இருவரும் முதன்முறையாக இந்த படத்தில் இணைந்து பணியாற்றி வருவதால், எப்போதும் போல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கான ஹீரோயினை பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர் படக்குழுவினர். அதன் படி, தற்போது வெளியாகியுள்ள தகவலில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சூர்யாவின் 42 ஆவது படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார் திஷா பதானி. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.
சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் துவங்கிய நிலையில், முதல் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் கோவாவில் முகாமிட்டுள்ளனர். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தை, புஷ்பா, பொன்னியின் செல்வன் படம் போன்று இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் இப்படம் 3டி-யில் உருவாக உள்ளதாக குறிப்பிட்டிருந்த படக்குழு, இப்படத்தை மொத்தம் 10 மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு வெளியாகி இருந்த இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 2.5 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்க, ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.