Sivaji Vs Rajinikanth : தமிழ் திரையுலகின் முன்னோடியாக பார்க்கப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் அறிமுகமான ஒரு நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய திரைப்படமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய திரைப்படமும் சுமார் 24 முறை ஒரே நாளில் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படி வெளியான திரைப்படங்களில் யார் வெற்றி கண்டது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 1976 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான மூன்று முடிச்சு திரைப்படமும், சிவாஜி நடிப்பில் வெளியான சித்ரா பௌர்ணமி திரைப்படமும் ஒன்றாக வெளியானது.
இந்த திரைப்படத்தில் மூன்று முடிச்சு திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாக, சித்ரா பௌர்ணமி திரைப்படம் நடுத்தரமான வரவேற்பை பெற்றது. 1977 ஆம் ஆண்டு சிவாஜிக்கு பிறந்த மண் என்கின்ற படம் வெளியாக, ரஜினிக்கு காயத்ரி என்கின்ற திரைப்படம் வெளியானது. இரண்டுமே சுமாரான விமர்சனங்கள் பெற்ற திரைப்படம் என்றாலும், சிவாஜி கணேசனின் பிறந்த மண் திரைப்படம் அதிக வசூலை பெற்றது.
அதே 1977 ஆம் ஆண்டு இறுதியில் சிவாஜிக்கு அன்னை ஒரு கோவில் என்கிற திரைப்படம் வெளியாக, ரஜினிக்கு ஆறு புஷ்பங்கள் என்ற திரைப்படம் வெளியானது. இது ரஜினியுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாப்பான திரைப்படங்களில் ஒன்று. ஆனால் சிவாஜியின் அன்னை ஒரு கோவில் திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
1978 ஆம் ஆண்டு சிவாஜிக்கு பைலட் பிரேம்நாத் என்கின்ற திரைப்படம் வெளியான நிலையில், அதே நாளில் ரஜினிக்கு மூன்று திரைப்படங்கள் வெளியானது. அவை தப்புத்தாளங்கள், அவள் அப்படித்தான் மற்றும் தாய் மீது சத்தியம் ஆகிய திரைப்படங்கள் ஆகும். இதில் ரஜினியின் தாய் மீது சத்தியம் திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தாலும், சிவாஜியின் பைலட் பிரேம்நாத் திரைப்படம் தமிழகத்தில் 100 நாட்களும், இலங்கையில் 200 நாட்களும் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
1979 ஆம் ஆண்டு சிவாஜிக்கு பட்டாக்கத்தி பைரவன் திரைப்படம் வெளியாக, ரஜினிக்கு அன்னை ஓர் ஆலயம் திரைப்படம் வெளியானது. அந்த ஆண்டு சூப்பர் ஹிட் ஆன திரைப்படமும் அதுதான். ஆகவே இந்த போட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் திலகத்தை வெற்றி கண்டார். 1980 ஆம் ஆண்டு துவக்கத்தில் சிவாஜிக்கு ரிஷிமூலம் என்கின்ற படம் வெளியாக, ரஜினிக்கு பில்லா என்கின்ற திரைப்படம் வெளியானது. சிவாஜியின் ரிஷிமூலம் 100 நாட்களை தாண்டி ஓடிய நிலையில் ரஜினிகாந்தின் பில்லா திரைப்படம் 250 நாட்களை கடந்து ஓடி மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
1980 இறுதியில் வெளியான சிவாஜியின் விஸ்வரூபம் திரைப்படமும் ரஜினியின் பொல்லாதவன் படமும் ஒன்றாக வெளியானது. இரு திரைப்படங்களுமே நூறு நாட்களைக் கடந்து ஓடி இருந்தாலும் அதிக வரவேற்பு கிடைத்தது ரஜினியின் பொல்லாதவன் திரைப்படத்திற்கு தான்.
அதேபோல 1981 ஆம் ஆண்டு சிவாஜிக்கு கல்தூண் என்கின்ற திரைப்படம் வெளியாக ரஜினியின் பிளாக்பஸ்டர் வெற்றியான தில்லுமுல்லு திரைப்படம் வெளியானது. இதில் இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் ரஜினியின் தில்லுமுல்லு சற்று அதிக வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நடிகர்களுக்கும் இடையிலான இந்த ஆரோக்கியமான போட்டி கடந்த 1992 ஆம் ஆண்டு முடிந்தது, அந்த ஆண்டு கமல் மற்றும் சிவாஜி நடிப்பில் இணைந்து வெளியான தேவர் மகன் படமும், ரஜினிக்கு பாண்டியன் திரைப்படம் வெளியானது. பாண்டியன் திரைப்படம் 100 நாட்கள் ஓடி இருந்தாலும் சிவாஜி மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர்மகன் திரைப்படம் மிக மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
24 படங்களில் போட்டிகள் நிலவியிருந்தாலும், இருவரும் சரி சமமான வெற்றியை தான் பெற்றுள்ளனர். மேலும் நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து வளர்ந்தவன் நான் என்று பல மேடைகளில் சூப்பர் ஸ்டார் கூறியுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் 1970களின் பிற்பகுதியில் இருந்து நடிகர் திலகத்துடன் போட்டியிட்ட சூப்பர் ஸ்டார், சுமார் 50 ஆண்டுகள் கழித்து இன்றும் அதே போட்டி களத்தில் இருப்பது ஒரு அசாதாரண சாதனையாகவே பார்க்கப்படுகிறது.