
பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு, சாதனையாளருக்கான அட்லஸ் கோப்பை விருது வழங்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள ரோசஸ்டன் அக்ரிடியேஷன் இன்ஸ்ட்டியூட் இந்த விருதை வழங்கியுள்ளது.
உலக உருண்டையை அட்லஸ் தாங்கி நிற்பது போல், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தனது அர்ப்பணிப்பு, மன உறுதியால், இசை உலகை தனது தோளில் தாங்கி இருக்கிறார் என்பதை குறிப்பிடும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
1966-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், 1969-ம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தில் ‘இயற்கை என்னும் இளயகன்னி’ என்ற மனதை மயக்கும் மெல்லிசை பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.
பின்னர், எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான அடிமைப்பெண் படத்தில் வரும் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் தமிழில் பரபரப்பான பாடகராக வலம்வந்த எஸ்.பி.பி., பலமொழிகளில் மூன்று தலைமுறை கதாநாயகர்களுக்கு பின்னணி பாடியுள்ளார்.
சிறந்த பாடகராக ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆந்திர மாநில அரசின் பெருமைக்குரிய நந்தி விருதுகளை 25 முறையும், தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகருக்கான விருதுகளை 4 முறையும், கர்நாடக அரசின் சிறந்த பாடகருக்கான விருதுகளை 3 முறையும் பல்வேறு பிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
மேலும் இந்திய அரசின் மிகவும் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளாலும் கவுரவிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி., திரை இசைத்துறையில் படைத்த சாதனையை பாராட்டி சங்கீத கங்கா விருது, லதா மங்கேஷ்கர் விருது ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளன.
40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியதற்காக ’கின்னஸ்’ புத்தகத்தில் எஸ்.பி.பி. இடம் பெற்றுள்ளார்.இவரின் திரை இசைப் பயணம் தற்போது ஐம்பதாவது ஆண்டை அடைந்துள்ளது.
இந்நிலையில், திரைத்துறை எண்ணற்ற பங்களிப்பை ஆற்றியுள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அட்லஸின் ‘புகழ்பெற்ற ஜென்டில்மேன்’ விருதைநியூயார்க்கில் உள்ள ரோசஸ்டன் அக்ரிடியேஷன் இன்ஸ்ட்டியூட் வழங்கியுள்ளது.
எஸ்.பி.பி. பாலசுப்பிரமணியம் மான்பையும், பணிவையும், உலக ரசிகர்கள் வைத்திருக்கும் மதிப்பை தன் தோளில் சுமந்து, இந்த புகழ்வாய்ந்த இடத்துக்கு வந்துள்ளார். எப்போதும் இளமையாக இருக்கும் அவரின் குரல் மிகப்பெரிய மாயஜாலத்தை ஏற்படுத்துகிறது. அதுதான் அவர் மிகவும் வலிமையான, உணர்சிமிகுந்தஆளுமைத்திறன் கொண்டவர் என்பதை பிரதிபலிக்கிறது என ரோசஸ்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னனிப் பாடகராக, ஒரு ஆசிரியராக, இசையமைப்பாளராக இந்திய சினிமாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வலம் வந்துள்ளார். எப்போதும் இளமையாக இருக்கும் குரல், பணிவு, அர்ப்பணிப்பு, இசை உணர்வு ஆகியவற்றால், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
அனைவரையும் ஈர்க்கும் ஆளுமையாக இருக்கிறார் என ரோசஸ்டன் அக்ரிடியேஷன் இன்ஸ்ட்டியூட் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.