SP Balasubrahmanyam : சென்னையில் உள்ள காம்தார் நகருக்கு, தனது தந்தை SPB பெயரை வைக்க வேண்டும் என்று அவரது மகன் சரண் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்திய சினிமாவை பொறுத்தவரை சுமார் 16 மொழிகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த ஒரு மேதை தான் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இசைத்துறையை பொறுத்தவரை ஆறு தேசிய விருதுகள் வாங்கிய ஒரே பாடகராக அவர் திகழ்ந்து வருகிறார். ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதுகளை 25 முறை வென்ற அவர், ஆறு முறை FilmFare விருதுகளையும் வென்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
45 திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்பி பாலசுப்ரமணியன், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார். பாடகராவும், டப்பிங் கலைஞராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் சுமார் 54 ஆண்டுகள் இந்திய சினிமா திரைத்துறையில் பயணித்தவர் அவர், 1966 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.
undefined
இன்றளவும் கன்னட மொழி திரைப்படங்களில் அவர் படைத்த சாதனை தான் மிகப்பெரிய சாதனையாக இருந்து வருகிறது. அதாவது 12 மணி நேரத்தில் 21 பாடல்களை ரெக்கார்ட் செய்து சாதனை படைத்தவர் எஸ்பிபி. கடந்த 1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி பிறந்த அவர், சென்னை எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 74 வது வயதில் கொரோனா தொற்று காரணமாக 25 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு காலமானார்.
அவர் மறைந்தாலும் அவருடைய குரலால் இன்றும் அவர் உயிரோடு இருக்கும் நிலையில், அவருடைய மகன் எஸ்பிபி சரண் ஒரு புதிய முடிவினை எடுத்திருக்கிறார். அதன்படி சென்னையில் உள்ள காம்தார் நகருக்கு எஸ்பி பாலசுப்பிரமணியம் நகர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்த கோரிக்கையை அவர் முன் வைத்திருக்கிறார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் "நீண்ட நெடும் காலமாக தமிழ் சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து, அவர்களின் மாறா அன்பை பெற்று மறைந்த திரு. எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவை போற்றும் வகையில், அவர் இறுதி மூச்சுவரையில் நீண்ட காலம் வாழ்ந்த சென்னை காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியினை "எஸ்பி பாலசுப்பிரமணியம் நகர்" அல்லது "வீதி" என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவணம் செய்திட வேண்டும்" என்று அவர் கோரிக்கையை விடுத்துள்ளார்.