
பிக் பாஸ் இறுதிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த தனக்கு எவ்வித பரிசுத்தொகையும் வழங்கப்படவில்லை என்று கவிஞர் சிநேகன் பேட்டியளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள்.
வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார். ஆனால் இரண்டாம் இடம் பிடித்த கவிஞர் சிநேகனுக்குப் பரிசுத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை. இத்தகவலை ஒரு பேட்டியில் சிநேகன் கூறியுள்ளார்.
தனியார் பண்பலை வானொலிக்கு அளித்த பேட்டியில் சிநேகன் கூறியதாவது:
நூறு நாள் என்பது முதல் வெற்றி. முதல் இடம் என்பது முழு வெற்றி. முழு வெற்றியடைந்து பணம் வந்தது என்றால் அது மக்கள் கொடுத்த பணம். ஏற்கெனவே 2009ல் என் கிராமத்துக்குப் பக்கத்தில் ஓர் இடம் வாங்கினேன். என் அம்மா மற்றும் அப்பா பெயரில் நூலகம் அமையவேண்டும் என்பது என் ஆசை. என்னைப் போன்ற பல லட்சம் கிராம இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்பதற்காக நூலகம் கட்ட விரும்பினேன். இடம் என்னிடம் உண்டு. பணம் கிடைத்தால் நூலகம் கட்டிவிடலாம் என்று யோசித்துவைத்தேன்.
வெற்றி பெற்றிருந்தால் மேடையில் அதை அறிவிக்க இருந்தேன். கமல் சாரை எப்போது அந்நூலக விழாவுக்கு அழைக்கவேண்டும் என்கிற தேதி வரைக்கும் முடிவு செய்து வைத்திருந்தேன். கு. ஞானசம்பந்தன் தலைமையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் குழுவையும் யோசித்து வைத்திருந்தேன். தை மாதம் எந்தத் தேதி நூலகத்தைத் திறக்கவேண்டும் என்பதும் அந்த யோசனையில் இருந்தது.
இரண்டாம் இடத்துக்கு என இதுவரை அவர்கள் எந்தத் தொகையும் அவர்கள் வழங்கவில்லை. வழங்குவதாகவும் சொல்லவில்லை. ஒப்பந்தத்திலேயே அப்படித்தான் உள்ளது. அதனால் அதை எதிர்பார்ப்பது என் முட்டாள்தனம்.
இரண்டாவது இடத்துக்குத் தொகை கொடுக்கவில்லை என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நூலகத்தின் கனவு கொஞ்சம் தள்ளிப்போயிருக்கிறதே தவிர தவிர்க்கப்படவில்லை.
போட்டியில் ஜெயித்திருந்தால் அந்தக் காசைத் தொடவே கூடாது என நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கனவு பலிக்கவில்லை. அதற்குக் காரணம் எனக்குத் தெரியாது. மக்களுடைய தீர்ப்பு என்றார்கள். அதை ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.