பாலியல் வன்முறை குறித்து கருத்து.... வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்பதாக கூறினார் சித்தார்த்....!!!

First Published Jan 8, 2017, 3:20 PM IST
Highlights


கடந்த புத்தாண்டு தினத்தன்று நடந்த கொண்டாட்டத்தின்போது பெங்களூரில் பெண்கள் பாலியல் வன்முறை தாக்குதலுக்கு உட்பட்டது நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிசிடிவி கேமிரா வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவேகமாக பரவியதால் பெண்கள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் இதை கண்டு கொதித்து எழுந்தனர்.

இந்த சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் திரையுலக நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் கர்நாடக உள்துறை மந்திரி மட்டும் 'இந்த சம்பவத்திற்கு பெண்களின் உடையும் ஒரு காரணம்' என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் சித்தார்த் இதுகுறித்து தனது கருத்தை மிகவும் கோபத்துடனும் வருத்தத்துடனும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: 'இந்தியப் பெண்களை நம்மிடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்? இந்த உலகத்தில் மிகவும் அருவருக்கத்த, மோசமான ஆண்களாக நாம் இருக்கிறோம். 

இந்த சம்பவத்திற்காக வெட்கி தலைகுனிவதுடன் அனைவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு பெண் தான் நினைக்கும் ஆடையை அணிய வேண்டும் என்று நினைப்பது எப்படி தவறாகும்?. அதை தவறாக நினைப்பதை உடனே நிறுத்த வேண்டும். பெண்களின் ஆடைகள் குறித்த போதனைகளை முதலில் நிறுத்த வேண்டும்

பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை எதை வைத்தும் நியாயப்படுத்த வேண்டாம். 

இதில் எதுவுமே விதிவிலக்கல்ல. இந்த விஷயத்திற்காக அனைவரும் மனம் திறந்து குரல் கொடுங்கள். நீங்கள் ஒன்றை பார்த்தால் அதை உடனே சொந்தமாக்கி கொள்ள உரிமை கொண்டாட கூடாது.

உங்கள் கண்முன் நிற்பது மாற வேண்டும் என்று நினைப்பதைவிட உங்கள் பார்வையை மாற்றுங்கள்' என்று நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

click me!