
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் சசிகுமார். இவர் பாலா, அமீர் ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். 2008-ம் ஆண்டு ‘சுப்ரமணியபுரம்’ படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வெளியான ‘பசங்க’ படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார். 2010-ல் வெளியான ‘ஈசன்’ படத்தையும் இயக்கியுள்ளார்.
‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் நடிகராக அறிமுகமான இவர், அதன் பின்னர் ‘நாடோடிகள்’, ‘போராளி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘தாரை தப்பட்டை’ போன்ற படங்களில் நடித்தார். 2023-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘அயோத்தி’ படத்திற்கு அடுத்தபடியாக வெளியான ‘கருடன்’, ‘நந்தன்’ ஆகிய படங்கள் இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், ரூ.75 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து மகத்தான சாதனை படைத்திருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து சசிகுமார் சத்யசிவா இயக்கத்தில் ‘ஃப்ரீடம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யசிவா ஏற்கனவே ‘கழுகு’, ‘சவாலே சமாளி’, ‘1945’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எந்த தவறும் செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக் கொண்ட இருவர் தப்பித்து செல்வது போன்ற கதைக்களத்துடன் டீசர் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 10-ம் தேதி வெளியாக வருகிறது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.