இது சர்கார் விமர்சனமல்ல... தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆதரவாகவும் டிக்கெட் கொள்ளையை எதிர்த்து ஒரு பதிவு...

By sathish kFirst Published Nov 8, 2018, 5:51 PM IST
Highlights

'சர்கார்' படத்தின் கதை, (சர்க்கார் என்பதில் 'க்' விடுபட்டது என்னுடைய பிழையல்ல. நியூமராலஜி படுத்தும் பாடு!) அந்தப் படம் சொல்லும் நீதி! இவை குறித்து மட்டும்தான் விவாதிக்க வேண்டுமா? இல்லை இது வேறு விமர்சனம்...

சர்கார் படம் வெளிவரும் முன், கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கி, ஜெமோ சவால் விட்டு, பின் பாக்கியராஜ் தலையிட்டு, முருகதாஸ் மடங்கி (ஜெமோ பம்மி) பிரச்சனை ஒரு வழியாக சுமூகமாக! செட்டில் ஆகி நேற்று முன்தினம் வெளியாகி விட்டது.

இப்போது, "அரசுகள் தரும் இலவசங்கள்தான் நாட்டைக் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டது" 
என நுனிப்புல் அரசியல் மேயும் குரூப்புக்கும், "அரசு தரும் இலவசங்கள் தான் ஏழை எளிய மக்களின் சர்வரோக நிவாரணி" என்று சம்பந்தப்பட்ட அரசியல் குரூப்புகளுக்கும் மோதல் துவங்கியிருக்கிறது. அதுவும் நடந்து ஒரு தெளிவுக்கு வரட்டும்.

இதற்கிடையில், "தமிழ் ராக்கர்ஸ்'ஸை தேடிப் பிடித்து அடித்து நொறுக்குவோம்" என்று தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசமாக கூறியிருக்கிறார். அவர் 'சர்கார்' படத்தை உடனடியாக இணையத்தில் பரப்பியதற்காகச் சொன்னாரா, அல்லது பொதுவாகச் சொன்னாரா என்று தெரியவில்லை.

இது குறித்துதான் இந்தப் பதிவு.

முதலில் தயாரிப்பாளர் கே.ராஜன் 'சர்கார்' படத்திற்காக கூறியது என்றால் அதற்கான பதில் இதுதான்...

தியேட்டரில் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியில், ஆசையில் அல்லது விருப்பத்தில் எல்லோரும் எப்பாடுபட்டாவது ஐநூரு, ஆயிரம், ரெண்டாயிரம் என கொண்டு வந்து தியேட்டரில் கொட்டி படம் பார்த்து, 'ஒரு வாரத்துக்குள்' நீங்கள் போட்ட முதலை ஒன்னுக்கு நூறாக அள்ளிக் குவித்து உங்கள் அண்டா நிறைந்து வழிய வேண்டும்...

ஆனால், அதற்கு வழியில்லாதவனுக்கு ஒருவன் (தமிழ் ராக்கர்ஸ்) கதவு திறந்தால் அவனை தேடிப் பிடித்து அடித்து நொறுக்க வேண்டும்!
#ஆஹான்னா

கள்ளத்தனமா படங்களை இணையத்தில் வெளியிடுவது போலத்தான், கள்ளத்தனமா காலரைத் தூக்கிவிட்டு தியேட்டர்களில் டிக்கட் விற்பதும்.

அந்தக் கள்ளத்தனத்திற்கு பல்லைக் கடிப்பதை விட்டுவிட்டு, இந்த கள்ளத்தனத்திற்கு முடிவு கட்டுங்கள். டிக்கெட்டில் குறிப்பிட்ட கட்டணத்தை விட ஒரு பைசாகூட அதிகம் வாங்காத நாணயத்தை நீங்கள் செய்தால், அதே நாணயத்துடன் 'இணைய இறக்குமதியை மதிக்காமல்' தியேட்டருக்கு வந்து படம் பார்ப்போர் எண்ணிக்கை உயரும்.

"கடன் உடன் பட்டு ஆயிரம் பிரச்சனைகளை சந்தித்து, மிகுந்த வலியோடும் கனவோடும் ஒருவன் படம் எடுப்பான், நீங்கள் நோகாமல் இணையத்தில் பரப்பவும் பாக்கவும் செய்வீர்களா?" என்ற கேள்வி எழுந்தால் அது நியாயமானது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேபோல் இது எல்லாப் படங்களுக்கும் இன்னும் சொல்லப்போனால் மெஜாரிட்டியான படங்களுக்குப் பொருந்தாது என்பதும் உண்மை.

சினிமா என்கிற கலைச் செயல்பாடு வெறும் வணிகம் சார்ந்ததல்ல, ரசிகர்களின் உளவியலில் அதுவொரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருவி என்ற புரிதலோடு எத்தனை திரைப்படங்கள் வருகின்றன? அத்தகைய கனவுகளோடும் வலிகளோடும் படம் எடுக்கும் இயக்குநர்களையும் அவர்களின் ஒத்த சிந்தனையோடு, போட்ட காசு வருமா வராதா என்ற லாப நட்டக் கணக்குப் பார்க்காத தயாரிப்பாளர்கள் இயக்குநர்களின் வலியை உணர்ந்து, எளிய மனிதர்களின் முகங்களைப் பிரதிபலிக்கும் அறிமுகமற்ற கலைஞர்களைக் கொண்டு 'பட்ஜெட்டுக்குள்' எடுத்து 'ஹிட்' அடிக்கும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் தானே.

சினிமாவை லாபம் கொழிக்கும் வர்த்தகமாக்கி, அதையும் ஒரு மிகப் பெரும் வணிகச் சந்தையாக்கி கார்ப்பரேட் முதலாளிகளும், கந்து வட்டி ரெளடிகளும் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, வினியோகஸ்தர்களையும், மல்டிபிளஸ் திரையரங்க உரிமையாளர்களையும் வியாபாரக் காந்தங்களாக மாற்றி, பணம் பணம் பணம் ஒன்றே குறி என்று வெறி கொண்டு அலையும், ரசிக உளவியலில் ஒரு வித மொன்னைத் தனத்தையும் குரூரத்தையும் விதைக்கும் சினிமாக்களை எண்ணிவிட முடியுமா?

இது ஒரு புறம் என்றால், சமூகப் பொறுப்புள்ள திரைப்படங்களை திரையிடுவதற்கான சூழலை திட்டமிட்டு தடுக்கவும், யாரும் பார்க்கத் தோதற்ற குறைவான காட்சிகளோடு தியேட்டரை விட்டு விரட்டவும், பணத்தைக் கொட்டி எடுக்கப்படும் ஸ்டார் வேல்வ்யூ நடிகர்கள் படத்தை ஊடகங்கள் உதவியோடு படாபட விளம்பரத்தின் மூலம் ரசிக மனங்களில் வெறியேற்றி திரையிட தியேட்டர்களை கபளீகரம் செய்யவும், அந்த அயோக்கியத்தனதிற்கு பதிலீடாக தியேட்டர்கள் ரசிகர்களை இழுத்து வச்சு பணம் பறிக்கும் மற்றொரு அயோக்கியத்தனம் நடக்கிறதா இல்லையா?

இதுவெல்லாம் கே.ராஜன் போன்ற நியாயவான்களுக்குத் தெரியாதா?
தெரியும். ஆனால், இதையெல்லாம் பேசமாட்டார்கள். நாம்தான் பேசியாக வேண்டும். 'திரைப்படத்துறை சார்ந்த சந்தைகள்' குறித்த சீரழிவு அரசியலை தோலுரிக்காமல், சமூகப் பொறுப்புமிக்க திரைப்படங்களுக்கு எதிர்காலமில்லை.

click me!