சர்கார் கதை பிரச்சனை! நடிகர் விஜயை உள்ளே இழுத்துவிட்ட முருகதாஸ்! கோபத்தில் ரசிகர்கள்!

By thenmozhi gFirst Published Oct 28, 2018, 6:12 PM IST
Highlights

சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். 

சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். 

விஜய் படம் என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்காது. அதுவும் ஏ.ஆர். முருகதாசுடன் விஜய் இணைந்தால் பிரச்சனைக்கு பஞ்சமிருக்காது. அதிலும் கதைத் திருட்டு சர்ச்சையும் எழும். இவர்கள் இருவரும் ஏற்கெனவே கூட்டணி வைத்த கத்தி படமும் திருட்டுக் கதை தான் என்று சர்ச்சை எழுந்து வழக்கும் தொடுக்கப்பட்டது. தாகபூமி என்ற படம் தான் கத்தி என்றானதாக மனுதாரர் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ், விஜய்யை இயக்கியுள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது. 

   ஆனால் பஞ்சாயத்து இல்லாமல் இல்லை. இந்தப் படத்தின் கதையும் தன்னுடையது என்று வழக்கு தொடர்ந்துள்ளார் வருண் ராஜேந்திரன் என்பவர். தான் எழுதிய செங்கோல் கதை தான் சர்கார் ஆகி விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இது பச்சை என்ற தலைப்பில் தான் எழுதிய கதை என்று ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். 

 செங்கோல் என்ற கதை 2007ஆம் ஆண்டு எழுத்தாளர் சங்கத்தில் வருணால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கதை தான் சர்கார் என்று அவர் கூறும் நிலையில், பச்சை என்ற கதை தான் சர்கார் என்று ஏஆர் முருகதாஸ் முதன் முறையாக மனம் திறந்துள்ளார். இந்தப் பிரச்சனை தற்போது எழுத்தாளர் சங்கத்திற்கு செல்லவே இரு கதைகளையும் படித்துப் பார்த்த சங்கத் தலைவர் கே.பாக்யராஜ், இரு கதைகளும் ஒன்று தான் என்று தெரிவித்துள்ளார். 
மேலும் இதுதொடர்பாக ஏ.ஆர். முருகதாசை தொடர்பு கொண்ட அவர், படத்தின் கதையாசிரியர் என வருண் ராஜேந்திரனின் பெயரையும் சேர்த்து கார்டு போடுமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முருகதாஸ், இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாக கண்டிப்புடன் கூறி விட்டாராம். 

கே.பாக்யராஜூம், வருணும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சித் தொடரில் ஒன்றாக வேலை பார்த்ததாகவும் தற்போது இருவரும் இணைந்து சதி செய்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் குண்டை தூக்கிப் போட்டுள்ளார் முருகதாஸ். வருண் ராஜேந்திரனிடம் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்றும், அவரை சந்தித்ததே இல்லை என்றும் கூறியுள்ள அவர், கதையை திருடியதாக அவர் கூறுவதில் எவ்வித லாஜிக்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

   சர்கார் படத்திற்கான பச்சை என்கிற கதையின் கருவை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி முடிவு செய்ய முடியும் எனக் கேட்டுள்ள அவர், முழு கதையும் தாம் இன்னும் சமர்ப்பிக்கவே இல்லையே என்றும் கூறியுள்ளார். படத்தைப் பார்த்து விட்டு பின்னர் முடிவு செய்யாமல் அவசரமாக முடிவு செய்வது ஏன் என்றும் முருகதாஸ் வினவியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை தனக்கானது இல்லை என்றும் நடிகர் விஜய்க்கு பிரச்சனையை உருவாக்க தன்னை பயன்படுத்துகிறார்கள் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார்.

click me!