Youtuber TTF Vasan : புகழ்பெற்ற யூடியூபரான டிடிஎப் வாசன் சென்னையில் நடத்தி வரும் கடையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யூடியூபர் டிடிஎப் வாசன்
யூடியூபில் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு பேமஸ் ஆனவர் டிடிஎப் வாசன். அதிவேகமாக பைக் ஓட்டுவது, பைக்கில் சாகசம் செய்வது போன்ற வீடியோக்கள் மூலம் 2 கே கிட்ஸ் மத்தியில் பேமஸ் ஆன வாசனுக்கு யூடியூப்பில் 47 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக டிடிஎப் வாசன் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். குறிப்பாக கடந்த ஆண்டு அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய வாசன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹீரோவான வாசன்
சுமார் ஒரு மாத காலம் சிறைவாசத்துக்கு பின் விடுதலை ஆன அவர், சினிமாவில் நாயகனாக நடிக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அவரின் முதல் படம் பெயர் மஞ்சள் வீரன் என்றும் அதை இயக்குனர் செல் அம் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி அப்படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் அப்படம் தொடங்கப்படாத நிலையில், அண்மையில் வாசனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் இயக்குனர் செல் அம்.
இதையும் படியுங்கள்... மஞ்சள் வீரனில் நீக்கம்; சீப் பப்ளிசிட்டிக்கு என்னை பயன்படுத்தினார் இயக்குனர் - பொங்கிய டிடிஎஃப் வாசன்!
ஐபிஎல் நாயகன்
மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் தற்போது ஐபிஎல் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் டிடிஎப். அப்படத்தின் படப்பிடிப்பு பிசியாக நடைபெற்று வருகிறது. சினிமாவில் நடிப்பதை தாண்டி, டிடிஎப் வாசன் தன்னுடைய நண்பன் அஜீஸ் உடன் சேர்ந்து சென்னையில் டிடிஎப் பிட் ஷாப் என்கிற கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த கடையில் பைக்குகளுக்கு தேவையான ஹெல்மெட் உள்ளிட்ட உபகரணங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
டிடிஎப் கடையில் திருட்டு
இந்த நிலையில், சென்னையில் உள்ள டிடிஎப் வாசனுக்கு சொந்தமான கடையில் திருட்டு நடந்துள்ளது. பைக்கில் வந்த இரு கொள்ளையர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று விலையுயர்ந்த ஹெல்மெட்டுகள் மற்றும் அங்கு கல்லாவில் இருந்த பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் திருடும் காட்சியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிஎப் வாசன், காசெல்லாம் பறிகொடுத்துட்டேன் என்று வடிவேலு பேசும் வசனத்தை பின்னணியில் ஒலிக்கவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த டிடிஎஃப் வாசன்!