
காலா படத்துக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினி, ரஞ்சித், வொண்டர்பார் நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படத்துக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
காலா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர், இசையமைப்பாளர்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், கரிகாலன் என்ற அடைமொழியுடன் காலா திரைப்படத்தை வெளியிட தடைகோரி, சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றததை அணுக உத்தரவிட்டது. அதன்படி, ராஜசேகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் காலா படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கரிகாலன் பட தலைப்பை ஆண்டுதோறும் புதுப்பித்து வந்த தென்னிந்திய வர்த்தகசபை, அதன்பிறகு கரிகாலன் என்ற தலைப்பை புதுப்பிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
தற்போது ரஜினி நடித்த கரிகாலன் என்ற தனது தலைப்பை பயன்படுத்தி காலா படத்தை உருவாக்கி வருகிறார்கள். எனவே தலைப்பை புதுப்பிப்பது தொடர்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, விதிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். கடந்த 19 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்றும், படத்தின் கதை உள்ளடக்கிய விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க
வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ராஜசேகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது கரிகாலன் அடைமொழியில்லாமல் படம் வெளியாவதில் ஆட்சேபனை இல்லை என ராஜசேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்தலைப்பை பதிவு செய்துவிட்டு புதுப்பிக்காமல் இருந்தால் அந்த தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று காலா படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறினர் கூறினார்.
இதையடுத்து, காலா படத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும், விசாரணைக்காக வழக்கை படம் வெளியாகும் ஜூன் 7 ஆம் தேதிக்கு முன்பாக பட்டியலிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும், ராஜசேகரின் மனு குறித்து ரஜினி, ரஞ்சித், வொண்டர்பார் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியேர் ஜூன் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.