ஜோதிகா என்றைக்குமே ஒரு ‘ராட்சசி’தான் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

By Muthurama LingamFirst Published Aug 8, 2019, 8:34 AM IST
Highlights

ஜோதிகாவின் ‘ராட்சசி’படத்தை தியேட்டரில் தவறவிட்டுவிட்டு அமேஸானில் பார்க்க நேர்ந்தபோது கொஞ்சம் குற்ற உணர்வு ஏற்பட்டது உண்மை. கல்வியை நேசிக்கும் அனைவருக்கும் இது நிகழவே செய்யும்.அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்தத்தக்க பதில்களே கிடைக்கும். அந்தப் பதில்களே இந்த ‘ராட்சசி’படம்.

ஜோதிகாவின் ‘ராட்சசி’படத்தை தியேட்டரில் தவறவிட்டுவிட்டு அமேஸானில் பார்க்க நேர்ந்தபோது கொஞ்சம் குற்ற உணர்வு ஏற்பட்டது உண்மை. கல்வியை நேசிக்கும் அனைவருக்கும் இது நிகழவே செய்யும்.அரசுப்பள்ளி ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு அலுவலர்களின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் மனம் வருந்தத்தக்க பதில்களே கிடைக்கும். அந்தப் பதில்களே இந்த ‘ராட்சசி’படம்.

இயக்குனர் கௌதம்ராஜ் மற்றும் எழுத்தாளர் பாரதி தம்பி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. மிக மோசமான சூழலில் இருக்கும் ஒரு அரசுப்பள்ளிக்கு நேரடி தலைமை ஆசிரியராக வருகிறார் கீதாராணி எனும் ஜோதிகா. நாயகி வந்ததும் ’நம்மவர்’, ’சாட்டை’, பேட்ட படங்களில் வருவது போல் அந்த சூழலே முற்றிலும் மாற்றியமைக்கப் படுகிறது. புதிய விதிமுறைகள் வகுக்கப் படுகின்றன. இந்த மாறுதல்கள் எல்லாம் அங்கு சொகுசாக வாழ்ந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அருகே உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கும் பிடிக்கவில்லை. உடனே தலைமை ஆசிரியை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். அந்த எதிர்ப்பை கீதாராணி எப்படி சமாளித்தார் என்பதோடு சுபம் போடுகிற கதை.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, தற்போது சமூக அக்கறை கொண்ட படத்தின் கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தலைமை ஆசிரியராக அரசு பள்ளியில் நடக்க கூடிய அவலங்களை மிகச்சிறப்பாக சுட்டிக் காட்டி அதற்கான தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஏனோ தெரியவில்லை ஜோதிகா முகத்தை அவ்வப்போது உர்ரென்று வைத்துக்கொள்கிறார். ஒரு தலைமையாசிரியருக்கான கெத்து கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.ஆனால் வசனங்கள் அதை முற்றிலும் மறக்கடிக்கின்றன.ஆனாலும் ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி என்பதை மறுக்க முடியுமா?

தனியார் பள்ளி உரிமையாளராக வரும் ஹரிஷ் பெராடி, தனது பள்ளி எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் வேலைகளில் நேர்மை இருப்பது சிறப்பு. ஜோதிகாவுடன் நெருக்கமாக பழகும் சிறுவனின் நடிப்பு அபாரம். அருள்தாஸ் நடிப்பில் தூள் கிளப்புகிறார்.அப்பாவாக, அரசியல்வாதியாக, இரக்கத்தின் உருவமாக பல கோணங்களில் நடித்து அசத்துகிறார். சில காட்சிகளில் மட்டுமே வரும் பூர்ணிமா பாக்யராஜின் நடிப்பு நிறைவு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் சத்யன், பி.டி.மாஸ்டராக நகைச்சுவையில் கைக்கொடுத்திருக்கிறார். உதவி தலைமை ஆசிரியராக கவிதா பாரதியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. கல்வி, பள்ளிக்கூடம் என முதல் படத்திலேயே சமூக அக்கறையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கௌதம் ராஜ். அரசு பள்ளிகளில் நடக்கும் தவறுகளையும், ஒழுங்குபடுத்தும் முறைகளையும் சுட்டிக்காட்டி தனது சமூக அக்கறைக்கு அட்டெண்டென்ஸ் கொடுக்கிறார்.

மைனஸ் என்றால், பள்ளி கூடத்தை மட்டுமே மையமாக வைத்து உருவாக்கி இருப்பது.எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இதே கதை சாட்டையில் சொல்லியாச்சு. படத்தில் சுவாரஸ்யம் கூடுதலாக இருந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். மாணவர்களின் இன்னொரு முகத்தையும் காட்டியிருக்கலாம். சான் ரோல்டன் இசையில் பாடல்கள் ஓகே ரகமே. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார். கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு படத்திற்கு செம பலம் சேர்த்திருக்கிறது. இரண்டு டுவிஸ்ட் படத்தின் அழுத்தத்தை கூட்டுகிறது. ஒன்று பொக்கே கொடுப்பது. இரண்டாவது, பூர்ணிமா யார்? என்று சொல்வது.

இதன் இன்னொரு சிறப்பு அம்சமே பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்களை பற்றி படம் பேசுகிறது. இது மிக குறிப்பிடத் தக்க சமாச்சாரம். ஆசிரியர்களுக்கு பயந்து பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்கு சென்றுகொண்டிருக்கும் மாணவ மாணவிகளை 9ம் வகுப்பில் பாஸ் போட்டு பத்தாம் வகுப்பு தேர்வை எழுத வைத்து வெற்றி பெற வைக்கிறார் ஜோதிகா.உண்மையில் யாரையும் நெகிழ வைக்கும் காட்சி இது.  இதுபோல இன்னும் சில காட்சிகள் புதுமையாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது.தியேட்டரில் தவறவிட்டவர்கள் முடிந்தவரை ஒருமுறை அமேஸானிலாவது பார்த்துவிடுங்கள் என்று ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்யலாம் இப்படத்தை.

click me!