ரஜினி படத்தின் ஒரு டிக்கெட் விலை மூவாயிரமாம்?! அறிக்கை விட்ட ரஜினி களமிறங்குவாரா? கறுப்பு ஆடுகளை களையெடுப்பாரா?

By vinoth kumarFirst Published Nov 19, 2018, 1:24 PM IST
Highlights

ரஜினி ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில் “தியேட்டர்களில் ரசிகர் மன்ற காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே யாருக்கும் விற்க கூடாது. நிர்ணயித்த கட்டணத்தை தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணங்களையும் வசூலிக்க கூடாது. மீறும் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார். ஆனாலும் ரஜினியின் எச்சரிக்கையையும் மீறி டிக்கெட் விற்பனை, கற்பனைக்கும் எட்டாத விலையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. 

சர்கார் படம் ரிலீஸான தீபாவளி மாலையில் பேஸ்புக்கில் வந்த அந்த பதிவு அதிர்ச்சியடைய வைத்தது. ஏழு இளைஞர்கள் கையில் சினிமா டிக்கெட்டை வைத்தபடி குரூப்பாக செல்ஃபி எடுத்திருந்தனர். அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததன் தமிழாக்கம் இதுதான்...’ஒரு வழியா சேலம் மால்ல உள்ள தியேட்டர்ல டிக்கெட் எடுத்துட்டோம். ஒரு டிக்கெட் ஜஸ்ட் ரெண்டாயிரம் ரூபாய் தான். வீ லவ் விஜே! தலைவா யூ ராக்.’ 
அப்படியானால் ஏழு டிக்கெட்டின் விலை பதினான்காயிரம் ரூபாய். அந்த ஃபேஸ்புக் பதிவின் கீழே சிலர் கமெண்டுகளை அள்ளிக் கொட்டி தெறிக்க விட்டிருந்தனர். இளசுகள் ‘சூப்பர் ப்ரோ, யூ ஆர் லக்கி!’ என்றிருந்தனர். 

அஜித் ரசிகர்களோ ‘மொக்க படத்துக்கு பதினாலாயிரம் ரூபாய் தண்டம்.’ என்றனர். குடும்பஸ்தர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள் சிலரோ ‘பதினாலாயிரம் ரூபாய்ங்கிறது ரெண்டு குடும்பங்களோட  ஒரு மாச தேவையை பூத்தி செஞ்சுடும். பெத்தவங்க காசை இப்படி கரியாக்குறீங்களே! இந்த போட்டோவுல உள்ள பசங்களோட பெற்றவங்க இதை பார்த்தா ஒண்ணு இவனுங்களை அடிச்சுக் கை, காலை உடைக்கணும். இல்லேன்னா இப்படியான தறுதலைகளை உலகத்துக்கு கொடுத்ததுக்காக அவங்க தற்கொலை பண்ணிக்கணும்.’ என்று பொங்கி தள்ளியிருந்தனர். 

சரி இந்த ஏழு பேரை ஒதுக்கி வைப்போம். அவர்களின் பர்ஷனல் விஷயங்களில் நமக்கு தலையிட உரிமையில்லை. ஆனால் அதேவேளையில் ஒரு மாபெரும் அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையின் ஓட்டை உடைசலையும் உலகறியை இழுத்துப் போட்டு துவைத்த ‘சர்கார்’ விஜய், தனது படத்தின் டிக்கெட் இவ்வளவு கொடூரமான லாபத்துடன் விற்பதை அறிந்தும் எப்படி அமைதி காக்கிறார்? நூறு, நூற்றைம்பது ரூபாய் டிக்கெட்டை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பது என்ன விதத்தில் நியாயம்? என்று பொங்கியிருந்தனர் விமர்சகர்கள். ஆனாலும் விஜய் இடமிருந்து பெரிய ரியாக்‌ஷன் இல்லை. விஜய்யை தள்ளி வைப்போம். 

இந்த சூழலில் வரும் 29-ம் தேதியன்று ரஜினிகாந்தின் 2.0 படம் வெளியாகிறது. இப்போது இந்த படத்தின் ரசிகர் மன்ற காட்சி டிக்கெட்டையும் சிலர் ரெண்டாயிரம், மூவாயிரம் என்று விற்க துவங்கியிருக்கிறார்கள். தனியாக ரசீது போல் அச்சடித்து சில தியேட்டர்களே இந்த அக்கிரமத்தை, ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து செய்கிறார்களாம். சில இடங்களிலோ, ரசிகர் மன்ற நிர்வாகிகளே ஒரு லம்ப் தொகை கொடுத்து தியேட்டரை இரண்டு மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு எடுத்துவிட்டார்கள். 

அத்தனை சீட்டுகளுக்கான டிக்கெட்டையும் தாங்களே பிரிண்ட் செய்து, இப்போது மிக கடுமையான ரேட்டில் ரஜினி ரசிகர்களிடம் விற்றுக் கொண்டிருக்கிறார்களாம். ஆக மொத்தத்தில் ’ஊழலை ஒழிப்போம்’ என்று சொல்லி புறப்படும் இரண்டு முக்கிய நடிகர்களின் படங்களின் விஷயத்தில் பெரும் ஊழல் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதையும் இவர்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகளே செய்வதுதான் பேரவலம். 

இந்நிலையில் இந்த தகவலை கேள்விப்பட்டு ரஜினி ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில் “தியேட்டர்களில் ரசிகர் மன்ற காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே யாருக்கும் விற்க கூடாது. நிர்ணயித்த கட்டணத்தை தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணங்களையும் வசூலிக்க கூடாது. மீறும் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார். ஆனாலும் ரஜினியின் எச்சரிக்கையையும் மீறி டிக்கெட் விற்பனை, கற்பனைக்கும் எட்டாத விலையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. 

சென்னை, கோயமுத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களில் மட்டும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இந்த டிக்கெட் ‘கள்ள’ விற்பனையின் மூலம் அள்ளியிருக்கும் பண மதிப்பு தலைசுற்றலை தருகிறதாம். 
ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளிடம் ‘தலைவரே எச்சரிச்சுட்டார். ஆனாலும் இவ்வளவு ரேட்டா?’ என்று கேட்டதற்கு, ‘கட் அவுட் வைக்கிறதுக்கும், காவடி தூக்கிட்டு வர்றதுக்கும், போஸ்டர், சுவர் விளம்பரத்துக்கும் அவரா காசு தர்றார்? இன்னைக்கு எச்சரிப்பார், நாளைக்கு ‘ஏன் எனக்காக காசு செலவு பண்ணினே?’ன்னும்  கேட்பார், அப்புறம் கட்சியாரம்பிச்ச பிறகு காசு இருக்கிறவனுக்கு மட்டும் சீட்டும், பதவியும் கொடுப்பார். 

அப்புறம் இத்தனை வருஷமா அவரை நம்பிட்டு இருந்த நாங்க எல்லாத்தையும் கைகட்டி பார்த்துட்டு மூலையில உட்கார்றதா? வேணும்னா வாங்கு, இல்லேன்னா ஓடு.” என்கிறார்களாம். வெறும் அறிக்கையோடு நில்லாமல், தன் செல்வாக்கை பயன்படுத்தி தன் கூட்டத்தில் உள்ள கறுப்பு ஆடுகளை கண்டுபிடிச்சு களையெடுத்திட ரஜினியால் முடியும். செய்வாரா? அவர் செய்வாரா!

click me!