
2021-ல் வெளியான ரஜினியின் அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில் ஜெயிலர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஜெயிலர் படத்தின் மூலம் தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயலிர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன் லால் ஆகியோர் கேமியோவாக நடித்திருந்தனர். அனிருத்தின் மிரட்டலான இசை படத்தின் பலமாக அமைந்தது.
கடந்த மாதம் 10-ம் தேதி ஜெயிலர் படம் வெளியான 10 நாட்களிலேயே ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இப்படம் மொத்தம் ரூ 564.35 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்தை சந்தித்து, அதற்கான காசோலையை வழங்கினார். சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ ஜெயிலரின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கலாநிதி மாறன் காசோலையை வழங்கினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திரைப்பட வர்த்தக நிபுணர் மனோபாலா விஜயபாலன் X வலைதள பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ ஜெயிலர் படத்தின் லாபத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ரூ.100க்கான காசோலையை கலாநிதி மாறன் ரஜினிக்கு வழங்கினார். ஜெயிலர் படத்திற்காக ரஜினிக்கு ரூ. 110 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. தற்போது ரூ.100 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் - 210 கோடி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாற்றி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஜெயிலர் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. அதன்படி வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பிராந்தியத்தில் மூன்றாவது அதிக வசூல் செய்த தென்னிந்தியத் திரைப்படமாக ஜெயிலர் மாறியுள்ளது, மேலும் KGF: 2 மற்றும் பாகுபலி 2: ஆகிய படங்களை தொடர்ந்து 3-வது இடத்தில் ஜெயிலர் உள்ளது.
ஜெயிலரின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கலாநிதி மாறனின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Sun NXT தளத்திலும், நெட்பிளிக்சிலும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சன் நெட்வொர்க் அதன் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் பதிப்புகளில் ஜெயிலரின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.