தலைவர் 169 (Thalaivar 169) படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாத்த படம் வெளியாகிய பின் 3 மாதங்களாக தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் ரஜினி (Rajini), அமைதி காத்து வந்த நிலையில், அண்மையில் அவரது 169-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் ‘தலைவர் 169’ படத்தையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்க உள்ளார். இதுகுறித்து வெளியான புரோமோவில் ரஜினியின் ஸ்டைலான, கெத்தான தோற்றமும், அனிருத்தின் மாஸான பின்னணி இசையும் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆனது.
இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai), தலைவர் 169 படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து எந்திரன் படத்தில் நடித்துள்ள இவர், தற்போது இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக தேர்ந்தெடுப்பதன் பின்னணி மற்றுமொரு முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவெனில், இப்படத்தை பான் இந்தியா (Pan India) படமாக எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதன் காரணமாகத் தான் பாலிவுட் நடிகையை ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.