’விஷாலிடம் வேகம் இருக்கிறது...ஆனால் விவேகம் இல்லை’...மேடையில் மானத்தை வாங்கிய இயக்குநர்...

By Muthurama LingamFirst Published Feb 15, 2019, 1:11 PM IST
Highlights

'திரையுலகில் உள்ளவர்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று நமது கோரிக்கைகளை முன் வைக்கும் பணியில் நானாகவே முன் வந்து உதவி வருகிறேன். ஆனால் அவர்களை சந்திக்கும்வரை என்னை பயன்படுத்திக்கொண்டு அதன் பின் கறிவேப்பிலையாக ஒதுக்கி விடுகிறார்கள்’ என்கிறார் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார்.

'திரையுலகில் உள்ளவர்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று நமது கோரிக்கைகளை முன் வைக்கும் பணியில் நானாகவே முன் வந்து உதவி வருகிறேன். ஆனால் அவர்களை சந்திக்கும்வரை என்னை பயன்படுத்திக்கொண்டு அதன் பின் கறிவேப்பிலையாக ஒதுக்கி விடுகிறார்கள்’ என்கிறார் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார்.

‘கோணலா இருந்தாலும் அது என்னோடதாக்கும்’ என்கிற புரட்சிகரமான தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயக்குமார் விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அவர்  பேசும்போது, “நான் சினிமாவில் நுழைய வேண்டும் என சென்னையில் அடியெடுத்த வைத்த அந்த முதல் நாளே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது சிபாரிசுடன் திரைப்படத் துறைக்குள் நுழையும் பாக்கியம் பெற்றவன். ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி ஹீரோக்களை இயக்கியவன். தயாரிப்பாளர் சங்கத்தில் நான் மூன்று முறை பொறுப்பில் இருந்தபோது, திரைப்பட துறைக்கு ஏதாவது நல்லது செய்துவிடலாம் என முயற்சித்தேன். ஆனால் அங்கு இருக்கும் சிஸ்டம் என்னை எதுவும் செய்யவிடாமல் ஒவ்வொரு முறையும் தடுத்துவிடும்.

 இருந்தாலும் தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணக்கமாகவே சென்று அவர்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்பட்டு திரையுலகிற்கு பல நல்ல விஷயங்களை கொண்டுவர முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். அரசாங்கமும் நல்லது செய்ய தயாராகத்தான் இருக்கிறது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா முன்பு சிறிய படங்களை வாழ வைப்பதற்காக ஆயிரம் சிறிய திரையரங்குகள் கட்டலாம் என முடிவெடுத்தார். அந்த விஷயத்தை செயல்படுத்த இப்போதும்கூட அரசு தயாராகத்தான் இருக்கிறது.

ஆனால் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டு வெளியே வந்ததுமே, அவர்களைப் பற்றி குறை சொல்லி பேட்டி கொடுத்தால் அவர்களுக்கு எப்படி நமக்கு நல்லது செய்ய மனம் வரும்..? திரையுலகில் உள்ளவர்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று நமது கோரிக்கைகளை முன் வைக்கும் பணியில் நானாகவே முன் வந்து உதவி வருகிறேன். ஆனால் அவர்களை சந்திக்கும்வரை என்னை பயன்படுத்திக்கொண்டு அதன் பின் கறிவேப்பிலையாக ஒதுக்கி விடுகிறார்கள்.

அதனால் இனிமேல் இது தொடர்பான விஷயங்களில் தலையிடுவதில் இருந்து விலகிவிட நினைத்திருக்கிறேன். மேலும் இனிவரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன்.. தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேகம் மட்டும் போதாது.. சற்று விவேகமும் தேவை” என தற்போதுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து பேசினார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்.

click me!