
சினிமாவை நம்பியே சென்னையில் பெரும்பாலான தொழிலாளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 24 சங்கங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் உள்ளனர்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு காரணமாக பல கடை நிலை தொழிலாளர்கள் தங்களது மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து விட்டனர். சமீபத்தில் படப்பிடிப்புகள் துவங்கி இருந்தாலும். ஓடிடி ரிலீஸ் போன்ற இக்கட்டான சூழல் காரணமாக தயாரிப்பாளர்கள் பெரும்பாலானோர் படம் எடுக்கவே தயங்கி வருகின்றனர்.
சினிமா தொழிலாளர்கள் உள்ள 24 சங்கங்களும் பெப்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆர்.கே.செல்வமணி தலைவராக உள்ளார். ஊரடங்கு நேரத்தில் சம்மேளன சினிமா தொழிலாளர்களுக்கு பல உதவிகள் செய்யப்பட்டன. அதோடு சம்பள உயர்வு குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஏற்கனவே செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி; சினிமா தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் வரும் தை 1 முதல் புதிய ஊதிய முறை நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்திருந்தார்.
ஆனால் அந்த அறிவிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பின்னர் பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கூறியபடி உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை சினிமா தொழிலாளர்கள் மத்தியில் பேரிடியாக இறங்கியுள்ளது. அந்த அறிக்கையில்,இன்று நடைப்பெற்ற தயாரிப்பாளர் செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் காலங்காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 3 ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த மார்ச் 9ஆம் தேதி இரு சாராரும் கையொப்பம் இட்டார்கள். ஆனால் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அவமதிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் செயல்படுவதால் இருவருக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே மே மூன்றாம் தேதியான இன்று முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்கள் யாரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.