கந்து வட்டிப் பார்ட்டியாக மாறிவிட்டார் விஷால்... அனல் பறக்கும் தயாரிப்பாளரின் அறிக்கை!

By vinoth kumarFirst Published Nov 12, 2018, 9:46 AM IST
Highlights

தமிழ்ப்பட தயாரிப்பாளர்களில் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கும்போது ஒரு தயரிப்பாளர் மீது தன்னிச்சையாக ரெட் கார்டு தனது அதிகாரத்திமிரைக் காட்டியிருக்கிறார் நடிகர் விஷால்’ என்று கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி.

'தமிழ்ப்பட தயாரிப்பாளர்களில் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கும்போது ஒரு தயரிப்பாளர் மீது தன்னிச்சையாக ரெட் கார்டு தனது அதிகாரத்திமிரைக் காட்டியிருக்கிறார் நடிகர் விஷால்’ என்று கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி.

’’ஒரு படத்தை தயாரிப்பதே பெரும்பாடு! ஆனா இங்கு சம்பளம் என்பதுதான் பாதி நஷ்டத்தை ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படுத்துகிறது. படம் எடுத்து சம்பாதித்தவர்கள் இங்கு ரொம்பக் குறைவு. சம்பாதித்தவர்களும் கடனில் கிடக்கிறார்கள். தற்கொலை மட்டும்தான் செய்துகொள்ளவில்லை. ஆட்டை எடுத்து மாட்டில் போட்டு மறுபடியும் எழுந்துவிடமாட்டோமா என பிரம்ம பிரயத்தனம்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

படம் எடுப்பது பட்டினியிலிருந்து பல குடும்பங்களை காக்கிற நல்ல காரியம்தான். ஆனால் பல தயாரிப்பாளர்கள் குடும்பம் பட்டினியில் இருக்கிறது. அதற்குக் காரணம் தயாரிப்பாளர் சங்கத்தின் திட்டமிடல் குறைபாடுகள்தான். மற்ற மொழியில் படம் எடுப்பவர்கள் மினிமம் கேரண்டியோடு தப்பிக்கிறார்கள். இங்கே அந்த தப்பித்தல் இல்லை. ஒண்ணு அடுத்த படம். இல்லைன்னா ஓட்டாண்டி. இதுக்கு எப்போ தீர்வு?? 

தீர்வு தருவோம்னு வாக்குறுதி கொடுத்துட்டு நாற்காலிக்கு வந்தவங்க இன்னைக்கு ஒரு தயாரிப்பாளருக்கு தனது இன்னொரு நாற்காலியைப் பயன்படுத்தி தடைபோட்டிருக்காங்க. அதுவும் தன் படத்தில் ஏற்பட்ட நட்டத்தைக் கூட கண்டுகொள்ளாமல் தனது சம்பளமே குறியாக இருந்து இந்தக் காரியத்தை செய்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்க செயலாளருமான விஷால்.

தன் சொந்த தயாரிப்பு படங்களுக்கு கடன் வாங்கி அதற்கு வட்டி போட்டு திரும்பக் கேட்டால் அது கந்துவட்டி. கந்துவட்டிக்காரர்கள் சினிமாவிலிருந்து ஒழியவேண்டுமென ஒருபுறம் அறிக்கை. இந்தப் பக்கம் தன் சம்பளத்துக்கு வட்டி போட்டு கேட்டு ஒரு தயாரிப்பாளருக்கு ரெட். எப்படி இருக்கு நம்மாள் நியாயம்? பதவிகளைப் பயன்படுத்தி தன்னிச்சையாக ஒரு தயாரிப்பாளர் மீது ரெட் போட்டு தனது அதிகாரத்திமிரைக் காட்டியிருக்கிறார் விஷால். இதுவரை நடந்திராத அராஜகம். நடிகர் சங்கம் தயாரிப்பாளர் மீது ரெட் போட்டு நடவடிக்கை என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று.

 

முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு விஷால் என்ற தயாரிப்பாளரும் நந்தகோபால் என்ற தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிக்க வேண்டிய விசயம். இதில் நடிகர் சங்கம் எங்கே வந்தது? ரெட் போடுமளவிற்கு விஷால் தவிர விக்ரம் பிரபுவோ அல்லது விஜய் சேதுபதியோ நடிகர் சங்கத்தில் நடவடிக்கை எடுக்கச் சொல்லி கம்ளைய்ண்ட் கொடுத்திருக்கிறார்களா? அப்படி இருக்கும்போது எப்படி இப்படியொரு நடவடிக்கை??

விக்ரம் பிரபுவின் பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இப்படியொரு தன்னிச்சையான நடவடிக்கைக்கு விஷால் அல்லாத தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது? ஒரு தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கம் எடுத்த நடவடிக்கையை ஆதரிக்கப் போகிறதா? அல்லது எதிர்க்கப் போகிறதா? அல்லது பேசி சமாதானம் செய்யப்போகிறதா? அல்லது தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஏவப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப் போகிறதா?? 

பல நடிகர்கள் தயாரிப்பாளரின் இக்கட்டைப் புரிந்துகொண்டு சம்பளம் விட்டுக்கொடுத்துப் போகிற வேளையில் உடனே அறுத்து பொன்முட்டையை எடுத்தே ஆக வேண்டுமென்பது என்ன கட்டாயம் எனத் தெரியவில்லை. நந்தகுமார் தொடர்ச்சியாக படம் பண்ணக்கூடியவர். இந்த படத்தில் தரவில்லையென்றால் அடுத்த பட வெளியீட்டில் தரப்போகிறார். அல்லது விஷாலை வைத்து எடுத்த படத்தில் சம்பாதித்தாரா? நட்டத்தை ஏற்படுத்திய படம் அது. 

நியாயப்படி இவரை வைத்துப் படமெடுத்ததற்கு நட்ட ஈடு அவர்தான் தரவேண்டும். ஆனால் இங்கு மாறாக சம்பளமும் வட்டியும் கேட்டு நிற்கிறார். கொடுமை. இவரை வைத்து படமெடுத்துவிட்டு வட்டியும் கட்டிக்கொண்டு ரெட்டையும் வாங்கிக்கொண்டு திரு நந்த கோபால் இன்று நொந்த கோபாலாக நிற்கிறார். 96 படம் கொஞ்சம் காப்பாற்ற பழைய நட்டத்தை சரிபண்ணிக்கொண்டு ஒருவர் நிமிர்ந்தால்தானே அடுத்த படத்தில் சம்பாதிக்க இறங்க முடியும்?? 

நியாயத்தை தாண்டிய இந்த முடிவை அனைத்து தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா என்ன? இந்த மாதிரியான நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு முதலாளிகள் என்று பெருமைகொள்ள என்ன இருக்கிறது? பெருமைக்குரிய இடம் சிறுமைகொண்டு திண்டாடுகிறது..சக தயாரிப்பாளர்கள் களமிறங்கி சக தயாரிப்பாளரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நம் மரியாதை நம்மிட ஒருபோதும் இருக்கப்போவதில்லை. அந்த மரியாதையை காப்பாற்ற ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். அபாய அலாரமாக இந்த நடவடிக்கையை எடுத்துக் கொள்வது நல்லது. அவ்வளவுதான் சொல்வேன்’’ என்கிறார் சுரேஷ் காமாட்சி.

click me!