
அக்.6 ஆம் தேதி முதல் தமிழ் புதிய திரைப்படங்கள் வெளியாகாது எனவும், தமிழக அரசு திரையுலகிற்கு மணிமண்டபம் கட்டி விடக்கூடாது எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிக்கெட் விலையோடு சேர்த்து 18% ஜிஎஸ்டி வரியும் கேளிக்கை வரியும் சேர்ந்ததால் டிக்கட்கள் விலை மிகவும் உயர்ந்தது.
இதனால் பொதுமக்கள் திரையரங்கிற்கு வருவது குறையும் எனவும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தினர்.
மேலும் இதை கண்டித்து திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கமும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் தமிழக அரசிடம் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரிக்கை வைத்து திரையரங்குகளை திறந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி கடந்த 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 30% சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிற மொழி படங்களுக்கு 20 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் கேளிக்கைவரி விதிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை ரத்து செய்யாததையடுத்து தீபாவளி முதல் திரையரங்குகளை மூட மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதைதொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் சேர்ந்து இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், அக்.6 ஆம் தேதி முதல் தமிழ் புதிய திரைப்படங்கள் வெளியாகாது எனவும், தமிழக அரசு திரையுலகிற்கு மணிமண்டபம் கட்டி விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.
மேலும், மீண்டும் தமிழக அரசுக்கு கேளிக்கை வரியை ரத்து செய்யகோரி கடிதம் கொடுக்கப்பட இருப்பதாகவும், கண்டிப்பாக தமிழக அரசு பரிசீலித்து வரியை ரத்து செய்யும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.