தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவருக்கான தேர்தல் கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர் முன்னிலையில் நேற்று (9.8.21) சங்க வளாகத்தில் நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தலைவர், துணைத்தலைவர் உள்பட 11 பேர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களில் தலைவராக இருந்து வந்த, தயாரிப்பாளரும் நடிகருமான ஜேகே.ரித்திஷ், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனால் இவர் வகித்து வந்த தலைவர் பதவி காலியாக இருந்துவந்தது.
அதே போல் இயக்குநராக இருந்த வீரமணியும் காலமானதால் 2 இயக்குநர் பதவிகளுக்கு கடந்த 3ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர்கள் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினரான பூச்சி எஸ்.முருகன் இயக்குநர்களில் ஒருவராக தேர்வானார். அடுத்து தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவருக்கான தேர்தல் கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர் முன்னிலையில் நேற்று (9.8.21) சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் அனைவரும் ஒருமனதாக போட்டியின்றி பூச்சி முருகனை தலைவராக தேர்தெடுத்தனர். தன்னை தேர்ந்தெடுத்த இயக்குநர்களுக்கு பூச்சி முருகன் தன் நன்றியை தெரிவித்ததுடன் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று உறுதி கூறினார். இதை தொடர்ந்து நடிகர் சங்கத்தை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.