இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. புனீத் ராஜ்குமாரின் இரு கண்களால் பார்வை பெற்ற நால்வர்..!

By Asianet TamilFirst Published Nov 1, 2021, 9:34 PM IST
Highlights

புனீத் ராஜ்குமார் மட்டுமல்ல, 200-ஆம் ஆண்டில் அவருடைய தந்தையும் நடிகருமான ராஜ்குமார் இறந்தபோதும், 2017-ஆம் ஆண்டில் பர்வதம்மாள் இறந்தபோதும் அவர்களுடைய கண்களும் தானம் செய்யப்பட்டன.

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் அளித்த கண் தானம் மூலம் நான்கு பேர் பார்வை பெற்றுள்ளனர். 

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார், அக்டோபர் 29 அன்று உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கர்நாடக மக்களையும் கன்னட திரையுலகையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியது இந்த மரணம். புனீத்தின் மரணம், ஒவ்வொருவருடைய வீட்டிலும் ஏற்பட்ட இழப்பைப் போல கர்நாடக மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இரு நாட்கள் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்று அவருடைய உடல் கண்டீரவா ஸ்டூடியோவில் அவருடைய பெற்றோர் நினைவிடத்துக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

புனீத் ராஜ்குமார் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய கண்களைத் தானம் செய்வதாக உறுதிமொழி பத்திரம் கொடுத்திருந்தார். அதன்படி புனீத் ராஜ்குமார் மறைந்த செய்தி வெளியானதுமே, அவருடைய கண்களைத் தானமாக அளிக்கும் பணியில்தான் அவருடைய குடும்பத்தினர் ஈடுபட்டனர். அதன்படி, புனீத்தின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டன. தானமாக பெறப்பட்ட கண்களை நாராயண நேத்ராலயா மருத்துவமனை தலைவர் புஜங்கஷெட்டி மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். வழக்கமாக தானமாகப் பெறப்பட்ட கண்கள் மூலம் இருவருக்குத்தான் அதை பொருத்த முடியும். அதன்மூலம் இருவர் மட்டுமே பாரவை பெறுவார்கள்.

ஆனால், புனீத் ராஜ்குமார் செய்த கண் தானம் மூலம், நான்கு பேருக்கு பார்வை கிடைத்திருக்கிறது. இது சாத்தியமானது குறித்து டாக்டர் புஜங்கஷெட்டி கூறுகையில், “வழக்கமாக இரண்டு கண்கள், இருவருக்கு மட்டுமே பொருத்தப்படும். ஆனால், புனீத்தின் கண்கள் மூலம் நால்வர் பார்வை பெற்றுள்ளனர். ஒவ்வொரு கண்ணையும் இரண்டாக வெட்டி, விழிப்படலத்தை முன்பகுதி, பின்பகுதி எனத் தனியாகப் பிரித்தோம். இதன்மூலம் முன் பகுதி விழிப்படலம் இருவர், பின் பகுதி விழிப்படலம் இருவர் என நான்கு பேருக்கு பொருத்தினோம்.

முதன் முறையாக நாங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. மறைந்த நடிகர் புனீத்தின் இரு கண்களும் ஆரோக்கியமாக இருந்தன. எனவே, இந்த முயற்சி சாத்தியமானது. ஒரு பெண், 3 ஆண்கள் என நான்கு பேருக்கு புனீத்தின் கண்களைப் பொருத்தியுள்ளோம். இந்த நால்வருமே இளம் வயதினர்தான். அவர்கள் நால்வருமே ஆரோக்கியமாக உள்ளனர்.  இந்த அறுவைச் சிகிச்சையை அக்டோபர் 30 அன்று நாள் முழுவதும் மருத்துவர்கள் மேற்கொண்டனர்.” என்று டாக்டர் புஜங்கஷெட்டி தெரிவித்தார். 

புனீத் ராஜ்குமார் மட்டுமல்ல, 200-ஆம் ஆண்டில் அவருடைய தந்தையும் நடிகருமான ராஜ்குமார் இறந்தபோதும், 2017-ஆம் ஆண்டில் பர்வதம்மாள் இறந்தபோதும் அவர்களுடைய கண்களும் தானம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!