ஜெய் பீம் விமர்சனம்... இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி..!

By Thiraviaraj RMFirst Published Nov 1, 2021, 6:25 PM IST
Highlights

ஜெய் பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்... மொத்தத்தில் இருளர் இனத்திற்கு வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்றத்தை களமாக கொண்டு புலனாய்வுத் திரில்லராக, படைக்கப்பட்டுள்ள ‘ஜெய் பீம்’ எதிர்பார்ப்பை விட உயர்ந்து நிற்கிறது.

ஹீரோவான சூர்யா (சந்துரு) வழக்கறிஞராகவும் நீதிக்கான அறப்போராளியாகவும் மிளிர்கிறார். நிஜ வாழ்க்கையில் போலீஸ் வன்முறை எப்படி இருக்கும்? ஆழ்ந்த ஏற்றத்தாழ்வுகள் உள்ள நாட்டில் சட்ட அமலாக்கத்தில் அளவுகடந்த அதிகாரத்தை முதலீடு செய்யும் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

பத்திரிக்கையாளராக இருந்த தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள ஜெய் பீம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இருளர்களின் இருண்ட பக்கங்கங்களை ஆழ ஆராய்ந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ஜெய்பீம். வெற்றிமாறனின் விசாரணை, மாரி செல்வராஜின் கர்ணன் ஆகிய படங்களை ஒட்டி இருக்கிறது இந்த ஜெய்பீம். 1995 ஆம் ஆண்டின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜெய் பீம், திருட்டு வழக்கில் மூன்று இருளர் (ஒரு பட்டியல் பழங்குடியினர்) ஆண்கள் கைது செய்யப்படுவதில் தொடங்குகிறது. 

நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க வேண்டிய அழுத்தத்தின் கீழ், நீதி அமைப்பில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்களுக்குத் தொடர்புகளோ, பணபலமோ இல்லை என்பதை நன்கு தெரிந்தும், அவர்கள் மீது மீது பொய் வழக்குகள் புணையப்படுகிறது. ராஜகண்ணு, மொசக்குட்டி மற்றும் இருதப்பன் போன்றவர்கள் ஒரு வழக்கில் மாட்டுகின்றனர். அதில் கற்பனைக்கும் எட்டாத வகையில் சிக்க வைக்கப்படுகின்றனர்.

சூர்யாவை வைத்து ஜெய் பீம் அறிவிக்கப்பட்டபோது, ​​இது ஒரு வழக்கமான கதையாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி பல மடங்காக உழைப்பை, எதிர்பார்ப்பை கொட்டி படத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார் இயக்குநர் த.செ.ஞானவேல். இதில் ஹீரோ போராடி, வாதாடி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுகிறார். ஆனால் ஞானவேல் ராஜகண்ணுவின் உலகத்தை செங்கலாக கட்டுகிறார்...அது இடிந்து விழும் முன். மணிகண்டன் தனது அன்பான சிரிப்பிலிருந்து சித்திரவதை செய்யப்படும் அலறல் வரை ஒவ்வொரு நொடியும் மனதை வலிக்க விடுகிறார்.

 லிஜோமோல் ஜோஸ், ராஜகண்ணுவின் மனைவியான செங்கண்ணியாக நடித்துள்ளார். அவர் தனது கணவருக்கு நீதி கிடைக்காமல் விட மாட்டேன் என பின்வாங்க மறுக்கிறார். அவரது முகத்தின் மூலம் சதித்திட்டத்தின் உண்மைகளை பிரதிபலித்து வழக்கில் முன்னேற்றத்திற்கு உத்வேகம் கொடுக்கிறார்.  லிஜோமோல் பாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்துகிறார். 

வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா வாழ்ந்துள்ளார். (வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் தனது நீண்ட வாழ்க்கையில் சாதி எதிர்ப்பு மற்றும் நீதிக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்தவர் என்று நம்பும் படி கச்சிதமாக நடித்துள்ளார்) தமிழ் சினிமாவில் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கமான வசனங்களை தாண்டி, வெடிகுண்டாக வெடிக்கின்றன வசனங்கள். 

 நீதிபதிகள் முன் வைக்கப்படும் வாதங்கள் யதார்த்தமானவையாக இருந்தாலும் நம்மை ஒரு புள்ளியில் கட்டிப்போடுகின்றன. நாம் திரையில் பார்க்கையில் நீதிமன்றத்தில் அதிக காட்சிகள் காட்டப்பட்டு இருந்தாலும் புத்துணர்ச்சியூட்டுகின்றன. மூத்த வழக்கறிஞராக நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர் இத்தனை சீரியான படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் கிச்சுக்கிச்சு மூட்டுகிறார். ஐ.ஜி. பெருமாள்சாமியாக பிரகாஷ் ராஜ், டீச்சர் மித்ராவாக ரஜிஷா விஜயன் ஆகியோரும், மிருகத்தனமான போலீஸ்காரர்களாக நடித்துள்ளவர்களும் நடிப்பு அசுரன்களாக மாறி இருக்கிறார்கள். 

திரைக்கதை காலப்போக்கில் முன்னும் பின்னுமாக செல்கிறது, ஆனால் எப்பொழுதும் கூர்மையாக இருக்கிறது. அதை மிகைப்படுத்தாமல் சஸ்பென்ஸை உருவாக்க உதவுகிறது. படத்திற்கு பொருந்தாத தேவையற்ற காதல், பாடல்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளை தவிர்த்து இருப்பதும் பாராட்டுக்குரியது. 
பாடல்களும் படத்தில் ஓட்டத்தை சீர்குலைக்காமல் இயல்பாகவே கடந்து போகிறது. ஹிந்தியில் பேசியதற்காக பெருமாள்சாமி, ஒரு மார்வாடி கந்துவட்டிக்காரரை அறைவது பார்வையாளர்களிடமிருந்து சில கைதட்டல்களைப் பெறுவதற்கான திணிக்கப்பட்ட காட்சியாக இருக்கிறது.  இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் நியாயமானது. தொடர்ந்து போராட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை, இந்தி பேசுபவர்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிப்பது போன்ற காட்சி ஆபத்தான மற்றும் அபத்தமானது.

நீதிமன்ற விவாதம், புலனாய்வு என ஜெய் பீம் எதிர்பார்க்கப்பட்டதை விட சிறப்பாக இருந்தாலும் போலீஸ் வன்முறையை சித்தரிக்கும் காட்சிகள் முரணாக உள்ளது. நிஜ வாழ்வில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் இங்கு அதனை மிகைப்படுத்தி வன்முறையை கோரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களிடம் பச்சாதாபத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அதீதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதோ எனத் தோண்ருகிறது. 

படம் யாருடைய கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது நிஜ வாழ்க்கை குடும்பத்திடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இல்லையெனில், திரையில் பெரிதாக்கப்படும் இந்த வலிமிகுந்த நினைவுகள் உயிர் பிழைத்தவர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிடும்.


 
பாண்டிட் குயின், பூலன் தேவியின் வாழ்க்கையை அனுதாபமாக சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றிருக்கிறது. அந்த படம் நிஜ வாழ்க்கையில் நடந்த பலாத்காரத்தை சித்தரித்தது அவர்கள் செய்த குற்றங்களை மறந்து அவர்கள் மீது அனுதாபடைந்து ரசிகர்கள் கோபமடைந்தனர். அது போன்ற மாயை உருவாகி விடக்கூடாது. ஜெய் பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்...

மொத்தத்தில் இருளர் இனத்திற்கு வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

click me!