படம் எடுக்க வாங்கிய பணம் என்னாச்சு?... மெளனம் கலைத்த ‘பரிதாபங்கள்’ கோபி - சுதாகர்!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 19, 2021, 7:23 PM IST
Highlights

பரிதாபங்கள் யூ-டியூப் சேனலில் கோபி, சுதாகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூ-டியூப் சேனல் மூலமாக அரசியல் மற்றும் மக்களின் அன்றாட பிரச்சனைகள் குறித்த காமெடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி, சுதாகர். அரசியல் நையாண்டியுடன் கலகலப்பாக வீடியோ வெளியிட்டு வந்த இவர்கள், மெட்ராஸ் சென்ட்ரல் யூ-டியூப் சேனலில் இருந்து வெளியேறி பரிதாபங்கள் என்ற யூ-டியூப் சேனலை சொந்தமாக ஆரம்பித்தனர். தற்போது இந்த யூ-டியூப் சேனலை 3 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். 

மக்களிடம் தங்களுக்கு பெருகிய ஆதரவை வைத்து கிரவுட் பண்டிங் முறையில் படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டனர். இதற்காக ஃபண்ட்மெலன் செயலி மூலம் நிதி திரட்டினர். இதன் மூலம் பரிதாபங்கள் யூ-டியூப் சேனலுக்கு 6.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. பொதுமக்களிடம் நிதி கிடைத்ததை அடுத்து,  ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். 

இதனிடையே ஃபண்ட்மெலன் செயலி மீது பல்வேறு மோசடி புகார்கள் கூகுள் இணையத்தில் பதிவாகி வருகின்றன. இந்த மோசடியில் கோபி - சுதாகருக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஜேசன் சாமுவேல் என்ற யூட்யூபர் தனது சேனலில் கோபி - சுதாகர் ஸ்காம் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ மூலமாக 
 நிதி திரட்டும் செயலி மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை விவரித்துள்ளார். இந்த மோசடியில் சிக்கிய 800-க்கும் மேற்பட்டவர்கள் தனியே ஒரு டெலிகிராம் குழுவை தொடங்கி, இழந்த பணத்தை மீட்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மோசடி குறித்து பார்வையாளர்கள் கமெண்ட் செய்த போது, பரிதாபங்கள் குழு சார்பில் அந்த கமெண்டுகள் நீக்கப்பட்டு வருவது பெரும் குழப்பத்தை உருவாக்கியது.

இந்நிலையில் பரிதாபங்கள் யூ-டியூப் சேனலில் கோபி, சுதாகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘சூப்பர் பெக்கர் என்ற செயலி எங்களிடம் புரமோஷனுக்கு வந்தார்கள் என்றும் மற்ற புரமோஷன் செய்வது போலவே அவர்களுக்கும் நாங்கள் புரமோஷன் செய்தோம் என்றும், மற்றபடி அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாகத்தான் நாங்கள் தயாரிக்கும் படம் தாமதமாவதாகவும் விரைவில் இந்த படத்தை தொடங்குவோம் என்றும் டீசரும் வெளியிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாமதத்திற்கும், குறிப்பிட்ட செயலியின் மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 
 

click me!