தமிழக அரசுக்கு பரவை முனியம்மாவின் வேண்டுகோள் !! நெகிழ வைத்த அன்புத் தாயின் பாசம் !!

By Selvanayagam PFirst Published Mar 2, 2019, 10:24 PM IST
Highlights

நாட்டுப் புறப்பாடகி பரவை முனியம்மாவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ள நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு வழங்கிய பரிசுத் தொகையை தனது காலத்துக்குப் பிறகு தன்னுடைய மாற்றுத்திறனாளி மகனுக்கு மாற்றித் தர வேண்டும் என முதலமைச்சருக்கு அவர் கோரிகை வைத்துள்ளார்.

பரவை முனிம்மாவை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது, தனது நாட்டுப் புற பாடல்கள் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர். விக்ரம் நடிப்பில் உருவான தூள் படத்தில அறிமுகமானவர் பரவை  முனியம்மா. அந்தப் படத்தில் வரும் சிங்கம் போல என தொடங்கும் பாடலைப் பாடி அசத்தினார். இதையடுத்து அவர் பல திரைப்படங்களில் பாட்டியாக நடித்துப் புகழ்பெற்றார்.

கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பரவை முனியம்மா உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகிவிட்டார். இதை அறிந்த ஜெயலலிதா உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததுடன்  எம்ஜிஆர் அறக்கட்டளை மூலம் அவரது பெயரில் 6 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய உத்தரவிட்டார்.


அதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 6000 ரூபாய் பரவை முனியம்மாவுக்கு கிடைத்து வந்தது. இந்த நிலையில்தான் அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள பரவை முனியம்மா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு வழங்கியுள்ள 6 லட்சம் ரூபாயை தனது காலத்துக்குப் பிறகு தனது 4 ஆவது மாற்றுத்திறனாளி மகனின் பெயருக்கு மாற்றித தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பரவை முனியம்மாவின் இந்த மாற்றுத் திறனாளி மகன் மீதான பாசம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

click me!