’என்னை கண்டு அதிகார வர்க்கம் பதறுவது ஏன் தெரியுமா..?’ இயக்குநர் பா.ரஞ்சித் பகீர் பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Aug 24, 2019, 12:14 PM IST
Highlights

இட ஒதுக்கீடு என்பதை குற்ற உணர்வாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கவலை தெரிவித்துள்ளார். 
 

இட ஒதுக்கீடு என்பதை குற்ற உணர்வாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கவலை தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற கல்வி உரிமை மாநாட்டில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகை ரோகிணி மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோகிணி, மத்திய அரசு குலக்கல்வி முறையை திணிப்பதாகக் குற்றம்சாட்டினார். மத்திய அரசு அதிகாரத்தின் மூலம் மக்களை துண்டாடி வருவதாகவும் நடிகை ரோகிணி வேதனை தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்,  திறமை என்பது சாதியின் அடிப்படையில் வருவது அல்ல என்றும் அறிவின் அடிப்படையில் வருவதே என்றார். மேலும் இட ஒதுக்கீடு என்பதை குற்ற உணர்வாக பார்க்கும் நிலையை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். `நமக்கு முன்னால் இருந்தவர்கள் நமக்காகச் சேர்த்து வைத்த ஒரே சொத்து கல்விதான். அதனால்தான் 'கல்வி எனும் பேராயுதத்தை ஏந்துவோம் ' என்கிறார் அம்பேத்கர். வேத காலத்தில் இருந்தே கல்வி, ஒரு சமூகப் பிரச்னையாகவே உள்ளது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சங்ககாலத்திற்கு பிறகு கல்வி நம்வாழ்வியலில் இருந்து விலகி மத மையப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறுகிறது.
 
தமிழ்க் கல்வியும், தமிழும் மதத்தையும் கடவுளையும் பாடுவதாக மாற்றப்படுகிறது. அதிலும் யார் பாட வேண்டும், யார் பாடக்கூடாது என்கிற பிரிவினை இருந்தது. மிகப்பெரிய அறம் கொண்ட தமிழ்ச் சமூகத்தில் கோயில்களைப் போல ஒரு பொதுவான கல்வித் தளம் இல்லாமலே இருந்திருக்கிறது. உணவிற்கான சத்திரங்கள் அதிகம் இருந்தது. ஆனால் கல்வி நிலையங்கள் மட்டும் இல்லை. ஆகத் திட்டமிட்டே கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மண்ணைப் பலர் ஆண்டிருந்தாலும், ஆங்கிலேயர்கள்தான் முதலில் எல்லோருக்குமான கல்வியை தந்திருக்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் வாயிலாக, இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடைத்துள்ளது. கல்வியின் வாயிலாக மட்டுமே உரிமைகள் மீட்டெடுக்கப்படுகின்றன. நீங்கள் எந்த சாதியிலிருந்து வந்திருந்தாலும், கல்வி கற்றவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். 

கல்வியின் மூலம் ஆட்சி அதிகாரம் கிடைக்கிறது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி என்னைக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது. நான் கேள்வி கேட்கத் தொடங்கியதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பதற தொடங்குகிறார்கள். அடுத்ததாகத் தகுதி, திறமை என்கிற இரண்டு முக்கியமான வார்த்தைகள்தான் இந்தியச் சமூகத்தை கட்டியாண்டது.

உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு? என்ன திறமை இருக்கு? என்று உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் படிப்பவர்களை விமர்சிப்பது இன்றும் தொடர்கிறது. 'கோட்டாவுல வந்தான்' என விமர்சித்து இட ஒதுக்கீட்டில் படிப்பவர்களை ஒரு குற்ற உணர்ச்சியில் தள்ளுகிறது இந்தச் சமூகம்.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி நான் உயர்ந்த நிலை அடையும்போது, அது அதிகாரத்தில் இருப்பவர்களை எரிச்சலடையவும் கோபமடையச் செய்கிறது. இவனால் என் வேலை வாய்ப்பு பறிபோவதால் சலுகை அடிப்படையில் வருகிறார்கள் என மட்டம் தட்டுகிறார்கள். அரசு நிர்ணயம் செய்யும் மதிப்பெண்ணை எடுத்துத்தான் நான் படிக்க வருகிறேன். சலுகையில் வரல. இட ஒதுக்கீடு என் உரிமை. கல்வி கிடைத்த குறைந்த காலத்திலேயே நான் உயர்ந்த நிலைக்கு வருகிறேன் என்றால் இங்க யாரு திறமைசாலி? என்னுடைய தகுதி என்பது நான் நல்லா படிப்பதால் கிடைக்கிறது. அது என் சாதியால் கிடைக்கவில்லை’’ என அவர் தெரிவித்தார். 

click me!