தமிழ்ப் பின்னணிப் பாடகர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை கொண்டு இருந்தார்கள்.
திரைப்பாடல் - அழகும் ஆழமும்-8 என்ன குரல் இது..!
தமிழ்ப் பின்னணிப் பாடகர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை கொண்டு இருந்தார்கள். அதிலும், 'இவரை விட்டால் வேறு யாராலும் இப்படிப் பாட முடியாது' என்கிற அளவுக்கு, ஓரிருவரின், 'ரேஞ்ஜே' வேற என்று சொல்லும் அளவுக்கு இருந்தார்கள். இந்த வரிசையில் முதல் இடம் வகிப்பவர் - எல்.ஆர்.ஈஸ்வரி.
இவர் அளித்த அம்மன் பாடல்கள் பெரிய அளவில் பிரபலம் ஆயின. ஆனாலும் திரைப்படங்களில் இவர் வழங்கிய 'கிளப்' பாடல்கள் எல்லாமே
ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தன. காரணம் - இவரின் குரல் வளம். கே.பி.சுந்தராம்பாள், எல்.ஆர்.ஈஸ்வரி, டி.ஆர்.மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருக்கு, வார்த்தைகள், வரிகள் அத்தனை முக்கியம் இல்லை. இவர்களின் குரல் போதும்; பாடலை 'உச்சத்திற்கு' கொண்டு போய் விடுவார்கள். அதிலேயே, பாடலின் 'பாவம்', தானாய் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும்.
'வாழ்க்கை எனும் ஓடம்..' (கே.பி.எஸ்.) 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை..' (எல்.ஆர்.) 'இசைத்தமிழ் நீசெய்த அரும் சாதனை..' (டி.ஆர்.)
'குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா..?' (சீர்காழி) காட்சி தேவை இல்லை. குரல் சொல்லி விடும். அத்தனை கம்பீரம். வரிகளை மிஞ்சிய ஒரு 'அதாரிடி'' ஒரு 'ஸ்டாம்ப்' ஒரு முத்திரை.. இவர்களின் அத்தனை பாடல்களிலும் உணரலாம்.
1967இல் வெளிவந்த படம் - செல்வமகள்.
இந்தப் படத்தின் கதை - ராஜ்ஸ்ரீ;
வசனம் - வில்லுப்பாட்டுக் கலைஞர், பெரியவர் சுப்பு ஆறுமுகம்.
ஜெய்சங்கர் - ராஜ்ஸ்ரீ இணைந்து நடித்த காதல் பாடல், டி.எம்.எஸ். - எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் கேட்பவர்களை சுண்டி இழுக்கும். யாரும் கோவித்துக் கொள்ளக் கூடாது - இப்பாடலைப் பொறுத்த மட்டில், டி.எம்.எஸ்.ஐ முந்தி நிற்கிறார் எல்.ஆர். இதே போன்றுதான், 'குடியிருந்த கோயில்' படத்திலும் 'துள்ளுவதோ இளமை' பாட்டிலும்! வேறு ஒன்றும் இல்லை... ஏற்கனவே சொன்னதுதான் - அவரது 'ரேஞ்ச்' அப்படி! கேட்டுப் பாருங்கள் - மனதிலோர் சுகம் வரும்... வரும்.
அவள்:
வெண்ணிலா முகம்
குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும்
மங்கலம் வரும்.
கண்ணிலோர் சுகம்
பொங்குதே மனம்
பொன்னான நாளல்லவோ
பொன்னான நாளல்லவோ
அவன்:
ஆண் குயில் வரும் வரை
ஆசைகள் தரும் வரை
பூங்குயில் காத்திருந்தாளோ இங்கே
அழகிய பொன்னுடல்
மெழுகென உருகிட
வாசலைப் பார்த்திருந்தாளோ
வாசலைப் பார்த்திருந்தாளோ
மன்னவன் துணை
மையலில் விழ
சித்திரைக் கிளி
கொஞ்சுவாய் இனி
அவள்:
கைவளை குலுங்கிட
கால்களில் நலுங்கிட
மைவிழி திறந்திருப்பாளோ - இங்கே
நாயகன் வருகையில்
நாணத்தில் விழுகையில்
காலத்தை மறந்திருப்பாளோ
காலத்தை மறந்திருப்பாளோ
வள்ளுவன் குரல்
சொல்லிடும் பொருள்
நல்லறம் தரும்
இல்லறம் வரும்.
இருவரும்:
வெண்ணிலா முகம்
குங்குமம் பெறும்.
நல்லநாள் வரும்
மங்கலம் தரும்.
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
இதையும் படியுங்கள்:-
அத்தியாயம் -7:எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு டஃப் கொடுத்த ஜெய் சங்கர்... இரவையும்- பகலையும் ஒன்றாக பார்த்த ஜேம்ஸ்பாண்ட்
அத்தியாயம் -6:கட்டாயத் திருமணத்தை முறியடிக்க பகீர் திட்டம்... வீட்டிற்குள் நுழைந்த வளையல்காரன்..!
அத்தியாயம்-5 :வீட்டை விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம்... அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா..?