தன்னை முன் நிறுத்தி, தன்னை எதிர்ப்பவர் யாருமில்லை... தான் 'ரொம்பப் பெரிய ஆளு' என்றெல்லாம் சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிற 'அறிமுகப் பாட்டு' இயல்பாகி விட்டது.
திரைப் பாடல் - அழகும் ஆழமும் -2 தமிழ் வணக்கம்.
தமிழ் இல்லங்களில், தமிழர் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்ற நாயகன். வறுமையில் உழன்று, தெருக்கூத்து தொடங்கி திரைப்படம் வரை, கடினமாக உழைத்து உழைத்து நம்பிக்கையுடன் முன்னேறிய மனிதன். படிப்படியாக வளர்ந்து தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தாயிற்று. சந்தோஷமா' இருக்க வேண்டியதுதானே...?
அது எப்படி...? மக்கள் நலனை மூச்சாய்க் கொண்டவர் ஆயிற்றே...! மக்கள் ஆட்சியின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகிற வகையில், தான் விரும்பியபடி, ஒரு படம் வழங்கத் தீர்மானித்தார். அதுவரை தான் சேர்த்திருந்த செல்வங்களை எல்லாம் அதில் கொட்டி, பிரமாண்டமாய் ஒரு படம் தயாரித்தார்; தானே இயக்கினார்.
'நாடோடி மன்னன்'.
நாயகன் - எம்.ஜி.ஆர்.
தனது முதல் படத்துக்கு, 'டைட்டில் சாங்' - முதல் பாடல் என்னவாய் இருக்க வேண்டும்...? தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர். பின்னணியில் ஒலிக்கும் - 'எங்களை வாழ வைத்த தெய்வத்துக்கு எங்களின் அன்புக் காணிக்கை!' படத்தின் பெயர்ப் பட்டியல் (டைட்டில்ஸ்) தொடங்கும். கூடவே, தனது சொந்தப் படத்தின் முதல் பாடல் ஒலிக்கும்.
'செந்தமிழே... வணக்கம் - ஆதி
திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்...
செந்தமிழே வணக்கம்!'
இத்தனை ஆண்டுகளில் எத்தனை நாயகர்களின் சொந்தப் படைப்புகளைப் பார்த்து விட்டோம்...? யாரேனும் தமிழுக்கு வணக்கம் சொல்லித் தொடங்கி இருக்கிறார்களா..? குறைந்த பட்சம், தமிழுக்குத் தமது படங்களில் ஏதாவது மரியாதை செய்தார்களா...?
தன்னை முன் நிறுத்தி, தன்னை எதிர்ப்பவர் யாருமில்லை... தான் 'ரொம்பப் பெரிய ஆளு' என்றெல்லாம் சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிற 'அறிமுகப் பாட்டு' இயல்பாகி விட்டது. யோசித்துப் பாருங்கள்... தமிழ் வணக்கம், இளைஞர் மேம்பாடு ('தூங்காதே.. தம்பி தூங்காதே..) உழைப்புக்கு மரியாதை ('உழைப்பதிலா.. உழைப்பைப் பெறுவதிலா.. இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா...)
('பாடுபட்டால் தன்னாலே.. பலன் கிடைக்குது கைமேலே..) சமுதாய சமதர்ம சிந்தனை (சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி... )
இத்தனையும் ஒரே படத்தில். அதுவும் தனது முதல் தயாரிப்பில்! யார் செய்தார்கள்..? யார் தந்தார்கள்..? யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். மக்கள் நாயகனாக எம்.ஜி.ஆர். உயர்ந்ததற்கு முக்கிய காரணம், மக்கள் மீது அவர் கொண்டு இருந்த அக்கறை. அவர் மக்களை நம்பினார்; மக்கள் அவரை நம்பினர். ஏதோ பேருக்கு, வணக்கம் சொல்லி விட்டுச் செல்வதாக, ஒப்புக்குச் செய்த பணி அல்ல அது. கவிஞர் முத்துக் கூத்தன் எழுதிய பாடல், ஒவ்வொரு வரியிலும், தமிழரின் மேன்மை பேசுகிறது.
படத்துக்கு வசனம் எழுதியவர் கண்ணதாசன். 'வீராங்கன்' பேசும் ஒவ்வொரு காட்சியிலும், மங்காத தமிழில் மக்களாட்சித் தத்துவம் கரை புரண்டு ஓடும். அனுபவித்துப் பார்த்தால்தான் அந்த சுகம் தெரியும். ஆனால், பாடல் எதுவும் கண்ணதாசன் எழுதியது இல்லை. இலக்குமணதாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா, என்.எம்.முத்துக்கூத்தன், ஆத்ம நாதன்.. - பட்டையைக் கிளப்பினார்கள்.
1958இல்வெளியான நாடோடி மன்னன் படத்துக்கு இசை அமைப்பு - எஸ்.எம்.சுப்பையா.(இது உட்பட, சில பாடல்கள் மட்டும் - என்.எஸ்.பாலகிருஷ்னன்) தமிழ் வணக்கப் பாடலைக் கேட்கிற வாய்ப்பு இல்லாமற் போனவர்கள், இப்போதேனும் முயற்சித்துப் பார்க்கலாம்.
பரவசம் ஊட்டுகிற பாடல். படிக்கும் போதே புரியும்.
இதோ கவிஞரின் வரிகள்:
செந்தமிழே... வணக்கம் - ஆதி
திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்...
செந்தமிழே... வணக்கம்.
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே.. உலக
அரங்கினுக்கே முதன்முதல் நீ தந்ததாலும்..
செந்தமிழே... வணக்கம்.
மக்களின் உள்ளமே கோயில் - என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
பெற்ற அன்னை தந்தை அன்றி - வேறாய்
பிறிதொரு தெய்வம் இலையென்றதாலே..
செந்தமிழே.. வணக்கம்.
சாதி சமயங்கள் இல்லா - நல்ல
சட்ட அமைப்பினைக் கொண்டே
நீதி நெறிவழி கண்டாய் - எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய்...
செந்தமிழே... வணக்கம்.
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
முதல் அத்தியாயத்தை பார்க்க:-உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும்... அன்றே சொன்ன கண்ணதாசன்..!