ஔவையாருக்கு கே.பி.சுந்தராம்பாள் என்றால், அகத்தியருக்கு - அமரர் சீர்காழி கோவிந்தராஜன்.
திரைப்பாடல் -அழகும் ஆழமும்-16 பக்திப் படத்தில் பொதுவுடைமைப் பாடல்!
தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் என்று சொல்வது உண்டு. இந்திய முனிவர்களில் தலையாயவர் என்றும் பாராட்டப் படுவது உண்டு; அகத்தியர்! ஔவையாருக்கு கே.பி.சுந்தராம்பாள் என்றால், அகத்தியருக்கு - அமரர் சீர்காழி கோவிந்தராஜன். வேறு ஒருவரை அந்தப் பாத்திரத்தில் நினைத்தும் பார்க்க முடியாது. தமிழ் இசைக்கு சீர்காழி ஆற்றிய பங்கு மகத்தானது. தமிழ்ப் பாடலை தமிழ்ப் பாணியில் பாடியவர் அவர். திரைப் பாடல் என்பதற்காக, தமிழின் கம்பீரம் குறைந்து போக அனுமதித்ததே இல்லை.
'குற்றால அருவியிலே' குளிப்பதாக இருந்தாலும், 'வெற்றி வேண்டுமா.. போட்டுப் பாரடா எதிர் நீச்சல்..' என்று நம்பிக்கை ஊட்டுவதானாலும், அதே மிடுக்குடன் பாடுவது -
சீர்காழியின் சிறப்பு. 1972இல் வெளியான அகத்தியர் - மாபெரும் வெற்றி பெற்றது. கதை -வசனம் - இயக்கம்: அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன். பாடல்கள் அனைத்தும் செந்தமிழில் தோய்த்து எழுதப்பட்டவை.
பூவை செங்குட்டுவன், உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் - என்று இரு கவிஞர்கள். பக்திப் பாடல்களுக்கு இவ்விருவரை விட்டால் வேரு யாருமில்லை. பக்தி ரசம் சொட்டச் சொட்ட, பாடல் தருகிறவர்கள். 'தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' பூவை செங்குட்டுவன் எழுதி டி.கே.கலா பாடியது. இன்றும் கூட, பலரின் 'மொபைல்' பேசியில் அழைப்பு ஒலியாக இருக்கிறது. உளுந்தூர்பேட்டை சண்முகம் - பாடல் ஆசிரியர்களில் அநேகமாக இவர் அளவுக்கு, தமிழ் கற்றவர் இல்லை. தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம்; நற்றிணையில் ஆய்வு செய்து எம்.லிட் பட்டம்; தமிழ் நாவல்களின் தோற்றமும் எழுச்சியும் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்.
பக்திப் பாடல்களில் இவரின் தனித்துவம் மிகப் பிரபலம் ஆனது. எளிய சொற்களில் ஆழமான ஆன்மிக அனுபவத்தைத் தந்த அற்புத கவிஞர் அவர். அகத்தியர் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்தப் பாடல், பொதுவுடைமையை, காந்தியத்தை, ஆன்மிகம் என்னும் ஒரு புள்ளியில் இணைத்தது.
பாடல் வரிகளைக் கையில் வைத்துக் கொண்டுபாடலைக் கேட்டுப் பாருங்கள்.ஒவ்வொரு சொல்லும் சற்றும் ஐயத்துக்கு இடமின்றி புரியும். அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில் அசத்துவார் சீர்காழி. இதோ அந்தப் பாடல் வரிகள்:
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்.
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதைநீ தர வேண்டும்.
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே...
அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே..
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்.
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதைநீ தர வேண்டும்.
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
இதையும் படியுங்கள்:-
1.டி.எம்.எஸை பின்னுக்கு தள்ளிய கணீர் குரல்... கேட்பவர்களை சுண்டி இழுக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி..!
2.தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டிலே... ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை..!