பிரபல நடிகர் பிந்து நந்தாவிற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்கு பின்னர் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சியை நிகழ்ச்சிகள் மூலமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் ஒரிசா நடிகரான பிந்து நந்தா. பின்னர் வெள்ளித்திரையில் 1996 ஆம் ஆண்டு நுழைந்த இவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மிகவும் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
45 வயதாகும் நடிகர் பிந்து நந்தா, கடந்த சில வருடங்களாக கல்லீரல் பாதிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலிரி சயின்ஸ் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் கல்லீரல் தானம் கிடைத்தால் பிந்து நந்தா உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக கூறியதை தொடர்ந்து, இவருடைய குடும்ப நண்பர் ஒருவர் பிந்து நந்தாவிற்கு கல்லீரல் தானம் கொடுக்க முன் வந்தார்.
இதை தொடர்ந்து கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் பிந்து நந்தாவிற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து ICU-வில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த பிந்து நந்தாவிற்கு ரத்தம் ஒவ்வாமை, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து கல்லீரல் கிடைத்தும் சிகிச்சை பலனின்றி பிந்து நந்தா, மார்ச் ஒன்றாம் தேதி இரவு உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிந்து நந்தா மறைவிற்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்,