
தமிழ் ராக்கர்ஸ்போன்ற சட்டத்திற்கு விரோதமான இணையதளங்கள் புதுப்படங்களை வெளியிட்டு தமிழ் சினிமாவுக்கு நஷ்டத்தைஏற்படுத்தி வருகிறது.
இதனை தடுக்க பல முயற்சிகள் எடுத்தும் இன்று வரை அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
கபாலி, சிங்கம் 3 போன்ற பிரமாண்ட படங்களையே சவால் விட்டு வெளியிட்டனர். ஆனாலும் அப்படி வெளியிட்ட படங்கள் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
ஆனால் இந்த தளத்தால் தற்போது ஒரு புதுமுக நடிகரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளதாக மனம் நொந்துள்ளார் புது முக நடிகர் கார்த்திக் நாகராஜன்.
படப்பிடிப்புகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் லைட்மேன்களின் வாழ்க்கை தரம், மற்ற துறைகளைக் காட்டிலும் மிக மோசமாக உள்ளது, என்பதை கூறும் படமாக ‘லைட்மேன்’ என்ற படத்தை எடுத்துள்ளனர்.
இதுபற்றி இப்படத்தில் நாயகனாக நடித்த புதுமுக நடிகர் கார்த்திக் நாகராஜன் தனது வருத்தத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
"எங்கள் படம், ’லைட்மேன்’ பிப்ரவரி 10-ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தால் பிப்ரவரி 9 அன்று இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுவிட்டது.
ஒரு குழுவாக நாங்கள் எங்கள் நேரம், முயற்சி, பணம் என இந்தப் படத்தை உருவாக்க முதலீடு செய்திருக்கிறோம். இதன் நோக்கம் எங்கள் திறமைகளை காண்பிக்கவேண்டும் என்பதே. ஆனால் இந்த மாதிரி சில சமூக பொறுப்பற்றவர்களின் செயல் எங்கள் கனவுகளை புதைத்துவிட்டன.
இந்தப் படத்துக்காக நாங்கள் போட்ட முயற்சி மிக அதிகம். தற்போது நாங்கள் கைவிடப்பட்டு தனியாக இருக்கிறோம். யாரென்று தெரியாத சிலர் திரைப்படத்தை உருவாக்குபவர்களுக்கு தொல்லை கொடுத்து எங்களையும் மோசமாக பாதித்துள்ளனர். இந்தப் படம் மக்களாலும், ஊடகங்களாலும் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை சார்ந்தே எங்கள் தொழில்முறை வாழ்க்கை உள்ளது.
கதையின் நாயகனாக நான் நடித்துள்ள முதல் படம். 2005ம் ஆண்டிலிருந்து திரைத்துறையில் எனக்கான ஒரு இடத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சியும் காத்திருப்பும் இப்போது நசுக்கப்பட்டுவிட்டது. எதிர்காலம் பிரகாசமாக இருந்து மக்கள் இந்த கள்ளத்தனத்தை ஆதரிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். நிஜமாக இது ஒருவரது தொழிலை பாதிக்கிறது" என்று வேதனையுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.