
பல கலைஞர்களை சின்னத்திரையில் அறிமுகம் செய்து வெள்ளித்திரைக்கு அழைத்து செல்லும் சிறப்பு, விஜய் தொலைக்காட்சியையே சேரும். இந்த தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இன்று பலர், வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
அதே போல் இந்த தொலைக்காட்சியில் பிரபலமான சிலர் அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையில் சிக்குவதும் வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில், 'கலக்கபோவது யாரு' நிகழ்ச்சியின் மூலம், பல குரல்களில் பேசும் திறமையால் பிரபலமானவர் மிமிக்ரி கலைஞர் நவீன்.
இவர் மீது இவருடைய முதல் மனைவி திவ்யலட்சுமி, பகிரங்கக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சென்னையை அடுத்த கொடுங்கையூரைச் சேர்ந்தவர் திவ்ய லட்சுமி. ஐ.டி. துறையில் பணியாற்றுகிறார். இவருக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மிமிக்ரி கலைஞர் நவீனும், பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் தற்போது நவீன் திவ்ய லட்சுமியுடன் நடந்த முதல் திருமணத்தை மறைத்து, மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்கிற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளார் என்பது தான் இவரின் குற்றச்சாட்டு.
திவ்ய லட்சுமி கொடுத்த புகாரின் பெயரில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நவீனுக்கும் மலேசியப் பெண்ணுக்கும், நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நீலாங்கரை போலீஸார் தடுத்து நிறுத்தி நவீனிடம் இரண்டாவது திருமணம் குறித்து விசாரணை மேற்க்கொண்டனர்.
நவீன் குறித்து பேசிய திவ்யலட்சுமி:
இந்நிலையில் தனக்கும் நவீனுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என திவ்யலட்சுமி கூறுகையில், தான் 11-ம் வகுப்பு படித்த போது, டியூஷனுக்காக நவீன் வீட்டுக்குச் செல்வேன். அப்போதுதான் எனக்கு நவீன் அறிமுகமானார். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகினோம் பின் எங்களது நட்பு ஒரு நிலையில் காதலாக மாறியது.
நான், அவரை உயிருக்கு உயிராகக் காதலித்தேன். வழக்கம்போல எங்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் வீட்டை மீறி நண்பர்கள் உதவியுடன் அரக்கோணத்தில் இருவரும், கடந்த 2016-ம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்துக்கொண்டோம்.
திருமணத்திற்கு பின் இருவரும் அவரவர் வீட்டில் வசித்துவந்தோம். எங்களின் திருமணம் வீட்டில் தெரிந்துவிட்டது. பின் நவீன், தன்னுடைய தங்கைக்குத் திருமணம் முடிந்ததும் என்னை அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். ஆனால் அது நடக்கவே இல்லை. நவீனுக்காகவே நான் விஸ்காம் படித்தேன். பிரபல தனியார் தொலைக்காட்சியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்க உதவி செய்தேன். அதில் மிமிக்ரி கலைஞராக நடித்த நவீனுக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. பல நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளுக்குச் சென்றார்.
அப்போதுதான் மலேசியாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்கிற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண், நவீனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அவரிடம் நவீன் எனது கணவர் என்று கூறியபோதும் அவர் அதைக் கேட்கவில்லை. சமூக வலைத்தளத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டது போல வீடியோ பதிவு சமீபத்தில் வெளிவந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன்.
அந்த வீடியோ குறித்து போலீஸில் புகார் கொடுத்தேன். அது குறும்படம் என்று நவீன் தெரிவித்தார். இதனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச் சமயத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் எங்களின் திருமண தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவருகிறது.
இந்நிலையில் அவரச அவரசமாக மலேசியப் பெண்ணுடன் நவீனுக்கு ஈ.சி.ஆரில் திருமணம் என்று தகவல் எனக்குக் கிடைத்தது. உடனடியாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு திருமணத்தை தடுத்துவிட்டனர். எனக்கு நீதி கிடைக்கும் வரை என்னுடைய போராட்டம் தொடரும்" என்று கூறியுள்ளார்.
மேலும் நவீன் தன்னை பற்றி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதால், அவர் மீது சைபர் கிரைம் பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள திவ்யலட்சுமி, நவீனின் இரண்டாவது திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது ` மன்னித்து விடு... எவ்வளவு காசு வேண்டுமென்றாலும் வாங்கிக் கொண்டு திருமணத்தை நடத்த அனுமதி கொடு' என்று நவீன் தரப்பினர் தன்னிடம் கெஞ்சியதாக கூறியுள்ளார்.
திவ்ய லட்சுமி பற்றி நவீன் பேசியது:
இதே சம்பவம் குறித்து நவீன் கூறுகையில், திவ்யலட்சுமியை தனக்கு தெரியும். ஆனால், அவரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. என்னை அவர் ஏமாற்றிவிட்டார். எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாக அவர் பொய் சொல்கிறார். சட்டப்படி அந்தப் பிரச்னையைச் சந்திக்க உள்ளதாகவும், திட்டம் போட்டு தன்னுடைய திருமணத்தை நிறுத்தியதாக ஆவேசமாக பேசியுள்ளார் நவீன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.