ரஜினியை அப்போதே எச்சரித்தேன்... உண்மையை உடைக்கும் சீமான்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 31, 2021, 12:37 PM IST
Highlights

அரசியலுக்கு வர வேண்டாம் என ரஜினிகாந்தை அப்போதே எச்சரித்தேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபல யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

போர் வந்தால் பார்த்துக்கலாம் என கர்ஜித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக இருந்த நிலையில், அதற்கு முன்னதாக ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் புறபட்டுச் சென்றார். அங்கு ஷூட்டிங்கில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரத்த அழுத்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கிருந்து  டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த் மருத்துவர்களின் அறிவுரையைக் கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்தார். ஆனால் அதன் பின்னரும் ரஜினி மக்கள் மன்றம் செயல்பட்டு வந்தது ரசிகர்கள் மனதில் ஆசையை வளர்த்து வந்தது. சமீபத்தில் உடற்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினிகாந்த், சென்னை வந்த உடனேயே மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்திற்கு பிறகு, அரசியலில் இருந்து விலகுவதாகவும், ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அரசியலுக்கு வர வேண்டாம் என ரஜினிகாந்தை அப்போதே எச்சரித்தேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபல யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

ரஜினி அரசியலை விட்டு விலகியதற்கு பதிலளித்த சீமான், கமல் ஹாசன் என்னதான் வெற்றி, தோல்வியை சந்தித்த மனிதராக இருந்தாலும், தேர்தல் தோல்வி அவர் மனதில் ஒரு வருத்தத்தை உருவாக்கி இருக்கும். அந்த மாதிரியான சூழ்நிலை ரஜினிக்கு வர வேண்டாம் என்பதற்காக பலமுறை அவரை எச்சரித்துள்ளேன். உங்களை யாரெல்லாம் உசுப்பேற்றி இறக்கிவிடுகிறார்களோ?, அவர்களே உங்களை விமர்சிப்பார்கள் என்பதை என்னுடைய பல பேட்டிகளில் சுட்டிக்காட்டி இருக்கிறேன். 

இந்த விளையாட்டு வேண்டாம். தூண்டிவிட்டு போய்விடுவார்கள். புகழின் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் அப்படியே இருந்து விடுவது  தான் நல்லது. வெயிலில் நின்று கூட்டங்களில் பேசுவது என்பது கூட மிகவும் கடினமானது. அதை எல்லாம் ரஜினியால் சமாளிக்க முடியாது. விமர்சனங்களை ரஜினியால் தாங்க முடியாது. வேண்டுமென்றால் அறிக்கை விட்டு அறிவுரை சொன்னால் போதும். நானே களத்தில் இறங்கி சண்டை செய்வேன் என இறங்க வேண்டாம் என சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார். 

click me!