தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு... நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தலா?

By Muthurama LingamFirst Published Jul 31, 2019, 12:34 PM IST
Highlights

நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்து ஏறத்தாழ 40 நாட்கள் ஆன நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து கோர்ட்  எந்த முடிவும் சொல்லாததால் நடிகர் சங்க உறுப்பினர்கள் பயங்கர அப்செட் ஆகியுள்ளதாகத் தெரிகிறது.
 

நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்து ஏறத்தாழ 40 நாட்கள் ஆன நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து கோர்ட்  எந்த முடிவும் சொல்லாததால் நடிகர் சங்க உறுப்பினர்கள் பயங்கர அப்செட் ஆகியுள்ளதாகத் தெரிகிறது.

ஏகப்பட்ட சர்ச்சைகளைச் சந்தித்த பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் நாசர், விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. மொத்தம் 1,604 பேர் ஓட்டுபோட்டனர். தபால் வாக்கு சீட்டுகள் தாமதமாக சென்றதால் வெளியூர்களில் இருந்த ரஜினிகாந்த் உள்பட பலர் வாக்களிக்க இயலவில்லை.

தேர்தலை எதிர்த்து 62 உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்ததால் ஓட்டுகளை எண்ணுவதை கோர்ட்டு நிறுத்தி வைத்தது. இதனால் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்தல் முடிந்து இன்றோடு  38  நாட்களாகியும் இதுவரை ஓட்டுகள் எண்ணப்படவில்லை.இதனால் நடிகர் சங்க பணிகள் முடங்கி உள்ளன. சம்பள பிரச்சினை குறித்து நடிகர், நடிகைகளால் சங்கத்தில் புகார் அளிக்க முடியவில்லை என்று மூத்த நடிகர் ஒருவர் கூறினார். நடிகர் சங்க கட்டிட வேலையிலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஓட்டு பெட்டிகளை வைத்துள்ள வங்கிக்கு ஏற்கனவே 15 நாட்களுக்கு ரூ.50 ஆயிரம்  வீதம் இதுவரை ரூ 1 லட்சத்துக்கும் மேல் வாடகை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது ஓட்டுகளை எண்ணுவது பற்றி நீதிபதி அறிவிக்காத பட்சத்தில் நடிகர் சங்கத்தின் அத்தனை செயல்பாடுகளும் முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. நடிகர் சங்கத்தின் கட்டிடப்பணிகளை நடத்தி முடிக்கத் தேவைப்படும் நிதிக்காக நடத்தப்படவிருக்கும் நட்சத்திரக் கலைவிழா பற்றிய முடிவையும் இந்தத் தேர்தல் முடிவுகள் வந்தால்தான் எடுக்கமுடியும் என்று தெரிகிறது.

click me!