100 கோடி பட்ஜெட்டில் உருவான மோகன்லால் படம் ; திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி

By Kanmani PFirst Published Nov 8, 2021, 6:12 PM IST
Highlights

100 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள மோகன்லாலின்  திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சத்தால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கிய ஓடிடி தளங்கள் பிரபலங்கள் பலரின் படங்களையும் அதிகவிலை கொடுத்து வாங்க துவங்கின. இதற்கு முன்னமே சேரன், சூர்யா,ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகி இருந்தன. அப்போது  இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வேறு வழியே இல்லாமல் தயாரிப்பு நிறுவங்கள் ஓடிடியை நாடத்துவங்கியுள்ளனர். ஊரடங்கு தளர்வுகளால் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பிரபலங்களின் படங்கள் பெரும்பாலும் வலைதளத்தில் தான் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள மோகன்லாலின் "மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்" படமும் ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது. தமிழில், இந்தப் படத்துக்கு ’மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். 

மிக பிரம்மாண்டமாக 100 கோடி செலவில் உருவாகியுள்ள மோகன்லாலின் "மரைக்காயர்"’ படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

திரு - ஒளிப்பதிவாளராகவும், சாபுசிரில் - கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஐதராபாத்தில் உள்ள ராமோஜீ பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் தான் படமாக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை மரக்காயர் குவித்திருந்தது. 

இரண்டு வருடங்களுக்கு மேலாக ரிலீசுக்கு காத்திருக்கும் இந்த படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக இதன் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் 100 கோடி ரூபாயும் மரக்காயர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையிலும் பிரபல நடிகர்களின் படங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதால் தயாரிப்பாளர் எடுத்துள்ள இந்த முடிவு திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!