"கதாநாயகனாக பாடியிருக்கிறேன்...!!!" - ஜெயலலிதாவுக்கு பேட்டி அளித்த எம்ஜிஆர்

First Published Dec 24, 2016, 12:00 PM IST
Highlights


தான் கதாநாயகனாக அறிமுகம் ஆனபோது பாடல்கள் பாடியதாக ஜெயலலிதாவுக்கு அளித்த பேட்டியில் எம்ஜிஆர் கூறியுள்ளார். வித்யாசமாக அப்போது திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த ஜெயலலிதா   1968ம் வருடம், ’பொம்மை’ இதழுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் கண்ட பேட்டி இது.

நடிப்புத்துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?

வறுமை.

உங்கள் பெற்றோர்கள் நீங்கள் நடிப்புத் துறையில் ஈடுபடுவதைப் பற்றி என்ன சொன்னார்கள்?

`பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க, பசியைப் போக்குவதற்காகக் நடிப்புத் தொழிலில் ஈடுபடும்போது எப்படித் தடை செய்வார்கள்?

நீங்கள் முதல் முதலாக போட்ட வேஷம் எது? அப்போது உங்கள் வயது என்ன?

‘லவகுசா’ நாடகத்தில், குசன் வேஷம் போட்டேன். ஏறக்குறைய ஆறு வயதிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் யார்?

குசன் வேஷத்தில் நடிக்கும்போது, நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். அவரது பெயர் நினைவில் இல்லை. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நான் சேர்ந்தபோது எனக்கு முதன் முதலாக நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் அவர்கள். பிறகு காலஞ்சென்ற எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் எனக்கு நடிப்பு சொல்லித் தந்தவர் ஆவார்.

நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம், அதில் நீங்கள் ஏற்று நடித்த வேஷம் இவற்றை சொல்ல முடியுமா?

மனோகரா நாடகம். மனோகரன் வேஷம்.

பெண் வேஷம் போட்டு நாடகங்களில் நடித்ததுண்டா?

நடித்ததுண்டு.

அந்த நாளில் நடிகர்கள் சொந்தக் குரலில் பாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் எப்போதேனும் சொந்தக் குரலில் பாடியிருக்கிறீர்களா?

பாடாவிட்டால், எப்படி கதாநாயகன் வேஷம் தருவார்கள்.

நீங்கள் முதன்முதலாக காமிராவின் முன் நின்றபோது எப்படி இருந்தது? அது எந்த ஸ்டூடியோவில் நடந்தது? உடன் இருந்தவர்கள் யார் யார்?

சோபனாசலாவாக இருந்து வீனஸ் ஸ்டூடியோவாக மாறிய இடத்தில் `வேல் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஸ்டூடியோ இயங்கி வந்தது. அதில்தான் நடித்தேன். அன்று என்னுடன் இருந்தவர்கள் எம்.கே.ராதா, என்.எஸ்.கே, டி.எஸ்.பாலையா முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

உங்கள் முதல் படத்தின் கதையை எழுதிய வாசன் அவர்களது படமே உங்கள் நூறாவது படமாக அமைந்தது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

அதுதான் இயற்கையின் விளையாட்டு என்பது (முதல் படம்:சதிலீலாவதி நூறாவது படம்:ஒளி விளக்கு)

திரைப்படத்தில் உங்களை கதாநாயகனாக்கி நடிக்க வைத்தது யார்?

பட உரிமையாளர்கள் என்று எடுத்துக் கொண்டால், முதலாவதாக எனக்கு கதாநாயகன் வேடம் தந்து படம் எடுத்தவர் நாராயணம் கம்பெனி உரிமையாளராக இருந்த காலஞ்சென்ற கே.எஸ்.நாராயண ஐயங்கார் அவர்கள்.

ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பிறகு எனக்கு கதாநாயகன் வேடம் தந்து, மக்களுக்கு என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் ஜூபிடர் பிக்சர்ஸின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்த காலஞ்சென்ற எம்.சோமசுந்தரம் அவர்கள்.

நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் 'நாடோடி மன்னன்'. சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

நான் விரும்புவதை என் தொழிலில் செய்து காட்டவேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒரு வேளை என் விருப்பம் நன்றாகவும் இருந்துவிடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நன் சொந்தத்தில் படம் எடுக்க இதுதான் காரணம்.

நீங்களே இந்தப் படத்தை டைரக்டு செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

முன் கேள்விக்கு சொன்ன விடையிலேயே, இதற்குரிய பதிலும் அடங்குகிறதே!

சினிமா மந்திரியாக வந்தால், நீங்கள் என்னென்ன சீர்திருத்தங்களைச் செய்வீர்கள்?

நாடோடி மன்னனைப் பாருங்கள். மனதில் தோன்றிய எனது எண்ணங்களை கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

திரைப்பட உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

நமது பண்பாட்டை கலாசாரத்தின் தனித்தன்மையைப் பிற மதத்தினரும், பிற நாட்டினரும் உணர்ந்து மதிக்கும் வகையில், சினிமாக் கலையின் மூலமாக தொண்டு செய்ய வேண்டும் என்பதும், அதோடு இந்தத் துறையில் நமக்கு வசதியும், வாய்ப்பும் இருந்தால், பிறருக்கு சமமாகவாவது நமது கலைத்துறையை உருவாக்கிக் காட்ட முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுமாகும்.

நீங்கள் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதுண்டா?

உண்டு.

உங்களுக்கு பிடித்த மேல்நாட்டு நடிகர்கள் யார் யார்?

எல்லோரையும் பிடிக்கும்!

இந்திப் படங்களை நீங்கள் பார்ப்பதுண்டா?

ஒரு சில படங்களைப் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் எந்தக் கட்சியில் முதலில் இருந்தீர்கள்?

காங்கிரஸில், காந்திய வழியில் சமதர்மத்தை விரும்பும் ஒருவனாக இருந்தேன்.

அந்தக் கட்சித் தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள்?

அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை. அதாவது நான்கு பேர் என்னைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை.

திமுகவில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள்?

1952 ம் வருடம் திமுகவில் சேர்ந்தேன்.

திமுகவில் சேரக் காரணம் என்ன?

எனது காந்திய வழிக் கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட திமுகவில் இருப்பதை அறிந்து சேர்ந்தேன்.

உங்களை இக்கட்சியில் சேர்த்த பெருமை யாருக்கு உண்டு?

என்னை யாரும் சேர்க்கவில்லை. அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன் போன்றவர்களிடம் என்னை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திய பெருமை நாடகமணி டி.வி.நாராயணசாமி ஒருவருக்கே உண்டு.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

நிச்சயமாக உண்டு.

நீங்கள் கோவிலுக்கு போனதுண்டா?

நிறைய. திருப்பதிக்கு இரண்டு முறை போய் வந்திருக்கிறேன். முதல் தடவை நான் திருப்பதிக்கு போய்வந்தபோது, எனக்கு வயது 12 அல்லது 13 வயதிருக்கும். நாடகக் கம்பெனியில் அப்போது நான் நடித்து வந்தேன். இரண்டாவது தடவை போனது `மர்மயோகி’ படம் வெளியானபோது, இரண்டாவது தடவை போனதுதான் திருப்பதியைப் பொறுத்தவரை கடைசியானது. அதற்குப் பிறகு வேறு பல கோயில்களுக்கு போயிருக்கிறேன்.

ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு அதை நிறைவேற்றப் போயிருந்தீர்களா?

பார்க்கவேண்டும் என்ற ஆவல். பக்தி, பிரார்த்தனை எதுவும் நான் செய்து கொள்ளவில்லை.

உங்கள் தாயார் எந்தக் கடவுளை வழிபட்டு வந்தார்கள்?

எங்கள் தாயார் இரண்டு கடவுளை வணங்கி வந்தார்கள். ஒன்று விஷ்ணு- நராயணன். அதன் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். குல தெய்வமாக வணங்கி வந்தது காளியை.

வீட்டை விட்டு புறப்படும் முன்பு இப்போது யாரை வணங்கிவிட்டு வருகிறீர்கள்?

என் தாயை.

உங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா? எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்?

என் பூஜை அறையில் என் தாய்-தந்தை, மகாத்மா காந்தியடிகள், என் வாழ்க்கைத் துணைவியின் தாய் தந்தையாரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு) இவர்கள்தான் நான் வணங்கும் தெய்வங்கள்.

பழைய உங்களது படம் ஒன்றைப் பார்த்தேன், அதில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் இருக்கிறீர்கள்.

ஏதெனும் ஜெபம் செய்து கொண்டிருந்தீர்களா?

நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன். இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக்கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒரு சின்னத் திருத்தம். அது ருத்ராட்சை மாலை அல்ல:தாமரை மணி மாலை.

அந்த மாலையை யார் தந்தார்கள்?

திருப்பதியில் நானே வாங்கிய மாலை அது.

தமிழ்ப் படங்களில் தமிழ்நாட்டின் பண்பை விளக்கும் காட்சிகள்[, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்று சிலர் சொல்கிறார்களே, இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா உங்கள் அபிப்ராயம் என்ன?

மறுக்கிறேன். கலை, அச்சாரம், பண்பாடு அதையும் கலாச்சாரம் என்று சொல்லலாம். பண்பு + பாடு = பண்பாடு. பாடு என்றால் உழைப்பு, பண்படுத்தப்பட்ட செயல், இப்படியும் கொள்ளலாம். ஆக இவை அத்தனையும் சமூகத்தில் உள்ள மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளை, செயல்களை ஆதாரமாகக் கொண்டு சொல்லப்படும் வார்த்தைகள்.

இப்போது தமிழ்ப் படங்களில் காண்பிக்கப்பட்டு வரும் காட்சிகள் தமிழகத்தில் நடைபெறாத நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

நாகரீகம் சிலரை ஆட்கொண்டுவிட்டதன் விளைவாக தமிழ் சமுதாயத்தில் எப்படிப்பட்ட வேதனை தரத்தக்க காட்சிகள் நம்முன் நிகழ்த்திக் காண்பிக்கப்படுகின்றன என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்க்க துணிவீர்களா?

சமீபத்தில் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஒரு பத்திரிகை படித்ததின் விளைவாக ஒரு மாளிகையில் விருந்து நடக்குமாம். குறிப்பிடத்தக்கவர்கள் தங்கள் மனைவியுடன் செல்வார்களாம். நடனம் ஆடுவார்களாம் எந்தப் பெண்ணும், எந்த ஆடவனும், அதாவது யாருடனும், யாரும் சேர்ந்து ஆடலாமாம். குறிந்த நேரத்தில் விளக்கு அனைக்கப்படுமாம். யாரை, யார் விரும்புகிறார்களோ அவர்களோடு கணவன்,  மனைவி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாமாம். வரையறுக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு விளக்கு எரியுமாம்.

 பிறகு திரும்பிச் சென்றுவிடுவார்களாம். மனைவியர்களை மாற்றிக்கொள்ளும், விளையாட்டு என்று அதற்குப் பெயராம். இது உண்மையாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கக்கூட நமக்கு துணிவில்லாவிட்டாலும், சமூகத்திலுள்ள ஒரு சிறு பகுதியினரால், நிறைவேற்றப்படும் பண்பாடு என்று சொல்லப்படுமானால், இதை படத்தில் காண்பிக்கவில்லை என்பதற்காக வருத்தபடுகிறீர்களா?

தமிழ்ப் படங்களுக்கு தங்கப் பதக்கம் கிடைக்குமா? தமிழர்களால் அமைக்கப்பட்ட குழு ஒன்றுக்கு, இந்த அதிகாரம் அளிக்கப்படுமானால் தங்கப் பதக்கம் நிச்சயம் கிடைக்கும். - நன்றி பொம்மை

இந்த பேட்டி பல பாகங்களாக வந்தது பல அறிவுபூர்வமான பதில்களை சமூக அக்கறையுடன் எம்ஜிஆர் அளித்திருப்பார்.

click me!