இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, மாணவர்கள் எழுப்பிய சுவாரஸ்யமான கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்துள்ளார்.
கோவையில் டாக்டர் எஸ் என் எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய திரை அனுபவம் குறித்தும், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். இது பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தன்னுடைய முதல் படத்திலேயே, ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'கைதி', விஜய்யை வைத்து இயக்கிய 'மாஸ்டர்' மற்றும் கமல்ஹாசனை வைத்து இயக்கிய 'விக்ரம்' போன்ற படங்கள் தாறுமாறு ஹிட் அடித்தது. குறிப்பாக விக்ரம் திரைப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தின் வெற்றியால் நடிகர் கமலஹாசன் மீண்டும் புத்துணர்ச்சியோடு, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதோடு சில படங்களை தயாரித்தும் வருகிறார்.
'ப்ராஜெக்ட் கே' படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்! வைரலாகும் ஸ்டைலிஷ் புகைப்படம்!
தற்போது தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள லோகேஷ், லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, படம் குறித்து எந்த கேள்வி கேட்டாலும்... தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த லோகேஷ் கனகராஜ், படப்பிடிப்பை முடித்த உடனேயே மிகவும் கலகலப்பாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
மாணவர் ஒருவர், விஜய்யுடன் இரண்டு படத்தில் பணியாற்றிய நீங்கள்.. அஜித்துடன் பணியாற்றுவீர்களா? என கேள்வி எழுப்பிய போது, கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் அஜித்துடன் பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார் லோகேஷ். மேலும் மற்றொரு மாணவர் 'கைதி இரண்டாம் பாகத்தை' எப்போது இயக்க போகிறீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு, 'லியோ' படத்தை தொடர்ந்து.. வேறு ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும். அதை முடித்த பின்னர் 'கைது 2' படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதேபோல் 'லியோ' படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்குவார் என்பதை அரசல் புரசலாக இந்த நிகழ்ச்சியில் உறுதி செய்துள்ளார். அதே போல் லியோ படம் குறித்து பல்வேறு விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், பொதுவாகவே நான் எல்லோரையுமே சார் என்று தான் அழைப்பேன். ஆனால் விஜய்யை தான் அண்ணா என்று அழைக்க தோன்றியது, என கூறியுள்ளார். இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.