#PuneethRajukumar | புனித் ராஜ்குமாருக்கு மேலும் ஒரு மகுடம் ; கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு

By Kanmani PFirst Published Nov 16, 2021, 6:32 PM IST
Highlights

மறைந்த புனித் ராஜ்குமாருக்கு  கர்நாடகாவின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தனர்  புனித் ராஜ்குமார். ரசிகர்களால்  பவர்ஸ்டார் என்று  செல்லமாக அழைக்கப்பட்ட புனித் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக  வெளிவந்த ‘யுவரத்னா’  மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து ‘ஜேம்ஸ்’, ‘த்வித்வா’ ஆகிய படங்களில் புனித் நடித்து வந்தார்.

சினிமாவில் மட்டும் நாயகனாக நடித்து விட்டு தான் சம்பாதித்த கோடிகளில் ஒரு ரூபாய் செலவிடவும் தயங்கும் முன்னணி நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்துள்ளார் புனித தனது வாழ்நாள் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை இலவச கல்வி, முதியோர் இல்லம், ஏழைகளுக்கு உதவி என தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ளார். சத்தமே இல்லாமல் இவர் செய்த பல நல்ல காரியங்கள் புனித்தின் மரணத்திற்கு பின்னரே  வெளி உலகிற்கு தெரியவந்தது என்றே சொல்லலாம்.

உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவரின் ஸ்டண்ட் போன்ற உடற்பயிற்சி வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தன. அவ்வாறு கடந்த மாதம் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த புனித்திற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 29-ம் தேதி புனித் காலமானார். அவரை மருத்துவமனையில் சேர்த்த சேதி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனையை திக்குமுக்காட செய்திருந்தனர். 

பின்னர் நடைபெற்ற அவரது இருந்து அஞ்சலியிலும், இறுதி ஊர்வலமும் மக்கள் வெள்ளத்திற்கு நடுவே தான் நடைபெற்றது என்றே சொல்லலாம். அந்த தருணத்தில் புனித் ராஜ்குமாரின் புகழ் உலகளவில் ட்ரெண்ட் ஆகியிருந்தது.  "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்பதை போல இறந்த பிறகும் அவரது கண் தானத்தால் 4 பேர் ஒளி பெற்ற சம்பவம் மேலும் நெகிழ்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

தமிழ் முன்னணி நடிகர்கள் பலர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கிற்கு நேரில் வந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை புத்த ராஜ் முகத்தில் முத்தமிட்டு வழியனுப்பி வைத்திருந்தார். குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்று வரையும் பல ஆயிரம் ரசிகர்கள் அவரது நினைவிடத்தை சுற்றி வருகின்றனர்.

இவரின் கண் தானத்தால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தின் வெளிப்பாடாக வெறும் 15 நாட்களில் 6000 ரசிகர்கள் கண் தானம் செய்துள்ளனர். இது எந்த நடிகரின் ரசிகர் பட்டாளமும் செய்யாத புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதோடு கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள சக்கரே பயிலு  யானைகள் பயிற்சி முகாமில்  உள்ள இரண்டு வயதான யானை குட்டிக்கு புனித்தின் பெயர் சூட்டி அழகு பார்த்தனர்.

இவ்வாறு ஒரு மாநிலமே கலங்கும் அளவிற்கு புனித ஆத்மாவாக வாழ்ந்து மறைந்த புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

click me!