'பிரத்யேகக் காட்சிகளுக்கு இவர்களை மட்டுமே அழைப்பேன்’...லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை...

By Muthurama LingamFirst Published Mar 16, 2019, 3:40 PM IST
Highlights

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ என்று தொடர்ந்து மூன்று வெற்றிகரமான தோல்விப் படங்களை இயக்கியிருந்தாலும் நான்காவது படமும் கிடைத்து அதை இயக்கியும் முடித்துள்ளார் ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன்.

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ என்று தொடர்ந்து மூன்று வெற்றிகரமான தோல்விப் படங்களை இயக்கியிருந்தாலும் நான்காவது படமும் கிடைத்து அதை இயக்கியும் முடித்துள்ளார் ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன்.

’ஹவுஸ் ஓனர்’ என்ற அப்படம் குறித்துப்பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், “உள்ளதை உள்ளபடி செல்லும் உள்ளங்களை மட்டும்தான், நான் எனது படங்களின் பிரத்தியேக காட்சிகளுக்கு அழைப்பேன். அப்படித்தான் இந்தப் படத்தின் பிரத்யேக காட்சிக்கும் எனது தோழமைகளை அழைத்திருந்தேன். படம் பார்த்துவிட்டு அவர்கள் என்னையும், எனது குழுவினரையும் பெரிதும் பாராட்டினார்கள். நான் மிக மிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டியது  என் மனதை நிறைய வைத்திருக்கிறது. அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும், மரியாதையும் அளவிட முடியாது.

தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக் கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற பெரும் கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன்.  மதன் கார்க்கி மற்றும் அனுராதா இருவரும் பாடல் வரிகளை இயற்றியுள்ளார்.  பாடல்களுக்கு  உயிருட்டும்விதமாக சின்மயி, சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர். 

இப்படத்தை வரும் கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.  தற்போது தமிழ்த் திரையுலகத்தில் நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றன,  அந்த வரிசையில்  இந்தப் படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன்…” என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன்.

இத்திரைப்படத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். ‘பசங்க’ படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற, ஸ்ரீரஞ்சனி ஒவ்வொரு வீட்டிலிருக்கும் அம்மாவை  பிரதிபலிக்கும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

click me!